இதற்கிடையில், காசாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஹமாஸ் மற்றும் அதன் தீவிரவாத பிரிவைச் சேர்ந்த 3,000 பேரை காசாவில் இருந்து நாடு கடத்தும் திட்டத்தை ஜோர்டான் முன்மொழிவதாக மத்திய கிழக்கிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ஜோர்டானின் திட்டத்தை நன்கு அறிந்த அமெரிக்க மற்றும் பாலஸ்தீன அதிகார சபை, நாடு கடத்தப்படுபவர்களில் ராணுவ மற்றும் சிவிலியன் தலைவர்களும், ஹமாஸ் தீவிரவாத உறுப்பினர்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஹமாஸை நிராயுதபாணியாக்கி, பாலஸ்தீன அதிகாரசபையிடம் காசாவை ஒப்படைக்க வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹமாசின் பிடியில் இருக்கும் காசா பகுதியில் ஹமாசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். வடக்கு காசா நகரமான பெய்ட் லஹியாவில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிராக நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கோஷங்களை எழுப்பினர். முதல் முறையாக நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், ‘போரை மக்கள் விரும்பவில்லை; ஹமாஸை மக்கள் விரும்பவில்லை; அல் ஜசீராவை மக்கள் விரும்பவில்லை’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ‘போதும்… போதும்…’ என்றும் கூறுகிறார்கள்.
மற்றொரு வீடியோ பதிவில், ‘காசா பகுதியின் அனைத்து மாகாண மக்களும் ஒன்றிணைந்து ஹமாஸுக்கு ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. காசா மக்கள் தங்கள் மக்களின் ரத்தக்களரியை நிறுத்த விரும்புகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரின் முக்கிய திருப்பமாக ஹமாசுக்கு எதிராக காசாவில் போராட்டம் நடந்து வருவது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஹமாசுக்கு எதிராக காசாவில் போராட்டம்: பாலஸ்தீன மக்களின் திடீர் முடிவால் திருப்பம் appeared first on Dinakaran.