காய்கறி வாங்குவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

 

தாராபுரம், மார்ச் 26: தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் பாறை கடை என்ற கிராமத்தைச் சார்ந்த ஆண்டிகாடு தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்லாத்தாள் (72). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் விளைந்த காய் கறிகளை தோட்டத்தில் முன்புள்ள சாலையின் ஓரம் கடை போட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை அப்பகுதியின் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி செல்லாத்தாளிடம் காய் கறிகள் வாங்குவது போல் நடித்து பேரம் பேசினர்.

அப்போது, திடீரென செல்லாத்தாளின் கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர். அதிர்ச்சியில் உறைந்து போன மூதாட்டி சம்பவம் குறித்து மூலனூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்ற இரண்டு வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து அவர்களை அடையாளப்படுத்தினர்.

தொடர்ந்து, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கள்வேலிப்பட்டி வடக்கு தெருவை சார்ந்த ரதின் என்ற பூரி (21) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியின் தங்க நகையை பறித்துச் சென்றது அவர் தான் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காய்கறி வாங்குவதுபோல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: