சென்னையில் ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதி, 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் 5 பொது வசதி மையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ரூ.57.72 கோடி செலவில் சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 170.21 ஏக்கர் பரப்பில் ரூ.40.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகள் மற்றும் சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.35.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 பொது வசதி மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் சேலம் மாவட்டம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், அரியகவுண்டம்பட்டியில் 99,346 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன், ரூ.25.34 கோடி செலவில், 102 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், 2000 நபர்கள் நேரடியாகவும், 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் குறிச்சி தொழிற்பேட்டையில் 1.49 ஏக்கர் பரப்பளவில் ரூ.32.38 கோடி செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் சுமார் 618 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 111 அறைகள் கொண்ட தொழிலாளர்கள் தங்கும் விடுதி முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விடுதியில் மின்தூக்கி வசதி, தீயணைப்பு வசதி, குடிநீர் வசதி, விளையாட்டுப் பகுதி, சலவையகம், பொதுவான சமையலறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதியானது குறிச்சி மற்றும் சுற்றியுள்ள தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய ஐந்து தொழிற்பேட்டைகளின் விவரங்கள்

திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை கிராமத்தில் 18.83 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்தொழிற்பேட்டையில் முதல் கட்டமாக 4.27 ஏக்கரில் ரூ.2.28 கோடி செலவில் 20 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

கடலூர் மாவட்டம், காடாம்புலியூர் தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் கிராமத்தில் 27.84 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பேட்டையில் ரூ.6.41 கோடி செலவில் 82 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

தூத்துக்குடி மாவட்டம், லிங்கம்பட்டி தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், லிங்கம்பட்டி கிராமத்தில் 60.00 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்தொழிற்பேட்டையில் முதல் கட்டமாக 11.11 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.51 கோடி செலவில் 31 தொழில் மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 2000 நபர்கள் நேரடியாகவும், 3000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

சேலம் மாவட்டம், உமையாள்புரம் தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், உமையாள்புரம் கிராமத்தில் 20.07 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்தொழிற்பேட்டையில் முதல் கட்டமாக 15.76 ஏக்கரில் ரூ.1.60 கோடி செலவில் 43 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் தொழிற்பேட்டை

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், வையாவூர் கிராமத்தில் 42.06 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பேட்டை 42.06 ஏக்கரில் ரூ.27.47 கோடி செலவில் 115 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 1800 நபர்கள் நேரடியாகவும், 3000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

ஐந்து புதிய பொது வசதி மையங்களை திறந்து வைத்தல்

சேலம் மாவட்டம், சேலம் (தெற்கு) வட்டம், தாதகாபட்டியில் அச்சுத் தொழில் குழுமத்திற்கு ரூ.13.46 கோடி செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமத்திற்கு ரூ.4.26 கோடி செலவிலும், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப் பொருட்கள் குழுமத்திற்கு ரூ.6.65 கோடி செலவிலும், கோயம்பத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், வெள்ளலூரில் அச்சு வார்ப்பு குழுமத்திற்கு ரூ.4.44 கோடி செலவிலும், ஈரோடு மாவட்டம், ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டையில் பொது கிடங்கு குழுமத்திற்கு ரூ.6.52 கோடி செலவிலும், என மொத்தம் ரூ.35.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து புதிய பொது வசதி மையங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் / முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: