*தாய், பொதுமக்கள் நன்றி
பெரம்பலூர் : பெரம்பலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் 9 வயதான மாற்றுத் திறனாளி மகனுக்கு காதொலி கருவி கேட்டதும், பத்தே நிமிடத்தில் வழங்கி தாயின் கோரிக்கையை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நிறைவேற்றினார்.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்புத் திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன.
இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாது காப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சொர்ண ராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தர ராமன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வி.களத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி மாரியம்மாள் என்பவர் தனது 9 வயதான கவினேஷ் என்ற மாற்றுத் திறனாளி மகனுக்கு பிறவியிலேயே காது கேட்காத நிலை எனவும், மிகவும் ஏழ்மையான குடும்ப சூழலில் காதொலிக்கருவி வாங்க வசதியில்லை என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அவரின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த மாவ ட்ட கலெக்டர் உடனடியாக காதொலிக் கருவி வழ ங்க மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கு உத்தர விட்டார்.
அதையடுத்து, பத்து நிமிடங்களில் கவினேஷிற்கு 2 காதுகளுக்கும் பொருத்தும் வகையில் காதொலிக்கருவிகள் வழங்கப்பட்டன. தனது குழந்தைக்கு காதொலிக் கருவி வழங்கிய மாவட்டக் ஆட்சியருக்கும், அரசிற்கும் அவரது தாய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
The post பெரம்பலூர் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த 10 நிமிடத்தில் சிறுவனுக்கு காதொலி கருவி வழங்கல் appeared first on Dinakaran.