இனி எல்லா மொழிகளிலும் ஐபிஎல் அவரவர் தாய்மொழியில் வர்ணனை கேட்பதே சுகம்: தோனி பரவச பேட்டி

சென்னை: ‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வர்ணனையை, அவரவர் தாய் மொழியில் கேட்பதே தனி சுகம். எனக்கு போஜ்புரியில் வர்ணனை கேட்பது பிடிக்கும்’ என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி வீரர் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிகள், ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்கின்றன. ஆட்டத்தை வர்ணனை செய்ய அந்தந்த மொழி தெரிந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல் முறையாக பீகாரில் பேசப்படும் போஜ்புரி மொழியிலும் கிரிக்கெட் வர்ணனையுடன் ஐபிஎல் ஆட்டங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

இது குறித்து சென்னை அணியின் முன்னணி வீரர் எம்.எஸ்.தோனி கூறுகையில், ‘நான் கேட்கும் கிரிக்கெட் வர்ணனைகள் பெரும்பாலும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு பீகாரில் பேசப்படும் போஜ்புரி மொழியில் வர்ணனை கேட்பது மிகவும் துடிப்பான உணர்வை தரும். இது, பழைய பள்ளி காலத்தில் வானொலியில் கேட்ட வர்ணனையை நினைவுபடுத்துகிறது. அது, எனக்கு எப்போதும் சுகமான அனுபவம். பலரும் தங்கள் தாய்மொழியில்தான் வர்ணனைகளை கேட்க விரும்புகின்றனர். அப்போதுதான் விளையாட்டை முழுமையாக அனுபவிக்க முடியும். அதே சமயம், ஹரியான்வி மொழி வர்ணனை தனித்துவம் வாய்ந்தது’ என்றார்.

* 0.12 விநாடியில் அவுட் செய்த தோனி
மும்பை அணியுடனான ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தபோது, நுார் அஹமது வீசிய பந்தை ஏறி அடிக்க சூர்யகுமார் முயன்று பந்தை தவற விட்டார். அந்த பந்தை மின்னல் வேகத்தில் கையில் பற்றிய விக்கெட் கீப்பர் தோனி (43 வயது), 0.12 விநாடியில் ஸ்டம்ப் செய்து சூர்யகுமாரை அவுட் செய்தார். இந்த வயதிலும் இத்தனை வேகமாக செயல்பட முடியுமா என காண்போரை திகைப்படையச் செய்துள்ளார் தோனி. இதற்கு முன்னரும், ஏழு முறை, இத்தகைய சாதனைகளை அவர் அரங்கேற்றி உள்ளார். கடந்த 2018ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், அந்த அணி வீரர் கீமோ பாலை, 0.08 விநாடி நேரத்தில் ஸ்டம்ப் செய்து தோனி அவுட்டாக்கியதே, கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக இதுவரை நீடித்து வருகிறது.

* முதல் போட்டின்னா… மும்பைக்கு தோல்விதான்
ஐபிஎல் என்றாலே முதல் போட்டியில் தோற்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாடிக்கையாகி உள்ளது. ஒன்றல்ல… இரண்டல்ல.. கடந்த 2012ம் ஆண்டு முதல், ஐபிஎல்லில் மும்பை அணி ஆடி வரும் முதல் போட்டிகள் அனைத்திலும் தோல்வியை மட்டுமே தழுவி சாதனை படைத்து வருகிறது. அதேசமயம், மும்பையுடன் சென்னையில் இதற்கு முன் மோதிய கடைசி 5 போட்டிகளில் சென்னை அணி ஒன்றில் கூட வென்றதில்லை. இந்த மோசமான சாதனை தோல்விக்கு சென்னை அணி நேற்று முன்தினம் நடந்த போட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

* சபாஷ் நுார் அஹமது
சென்னையில் நடந்த மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணிக்காக களமிறங்கிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் நுார் அஹமது மந்திரப் பந்துகளை வீசி மும்பை அணியை நிலைகுலையச் செய்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 18 ரன் மட்டுமே தந்து 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மும்பை அணிக்கு எதிரான, சென்னை பவுலரின் சிறப்பான பந்து வீச்சாக அது அமைந்தது. சென்னை அணியின் வெற்றிக்கு நுார் அஹமதுவின் பந்து வீச்சு முக்கிய காரணியாக இருந்ததை சிஎஸ்கே அணியினர் மட்டும் அல்லாது கிரிக்கெட் விமர்சகர்களும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

* ஐபிஎல்லில் கலக்கும் ஆட்டோ ஓட்டுநர் மகன்
சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் விக்னேஷ் புத்துார் (24). கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகனான இவரை, மும்பை அணி வெறும் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல்லில் எந்தவித அனுபவமும் இல்லாத வீரரான விக்னேஷ், துவக்க போட்டியிலேயே பதற்றமின்றி அற்புதமாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். போட்டியின் முடிவில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி, விக்னேசின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

* சென்னை போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை
சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் மைதானத்தில் வரும் 28ம் தேதி நடக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 10.15 மணிக்கு இணையதளத்தில் தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ww.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

* கேகேஆருக்கு எதிராக கோஹ்லி 1000 ரன்
ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவுக்கு (கேகேஆர்) எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 36 பந்துகளில் அவுட்டாகாமல் 59 ரன்கள் குவித்தார். இதன் மூலம், கொல்கத்தா அணிக்கு எதிராக 1,000 ரன்களை குவித்து புதிய சாதனையை அவர் அரங்கேற்றி உள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக, டேவிட் வார்னர் 1093, ரோகித் சர்மா 1070 ரன் குவித்து இந்த சாதனைப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர். தவிர, ஐபிஎல் வரலாற்றில், 253 போட்டிகளில் 8,063 ரன் குவித்து அதிக ரன்களை சேர்த்த வீரராகவும் கோஹ்லி திகழ்கிறார்.

The post இனி எல்லா மொழிகளிலும் ஐபிஎல் அவரவர் தாய்மொழியில் வர்ணனை கேட்பதே சுகம்: தோனி பரவச பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: