அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிடமாற்றம்: ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: வீட்டில் மூட்டை மூட்டையாக கோடிக்கணக்கான பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தரவை கொலிஜியம் உறுதி செய்து, ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டின் ஸ்டோர் ரூமில் இருந்து மூட்டை மூட்டையாக கோடிக்கணக்கான பணம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக, உள் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையும், நீதிபதி வீட்டில் பாதி எரிந்த பணக்குவியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்யும் உத்தரவை கொலிஜியம் நேற்று உறுதி செய்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த மார்ச் 20 மற்றும் 24ம் தேதிகளில் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களும், வதந்திகளும் பரப்பப்படுவதாக கொலிஜியம் கவலை தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு பரிந்துரையை ஏற்றதும், நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவார். மேலும், மறு உத்தரவு வரும் வரையிலும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்கக் கூடாது என்ற உத்தரவையும் கொலிஜியம் உறுதி செய்துள்ளது.  இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

* நீதிபதி மீது எப்ஐஆர் பதியக் கோரி வழக்கு
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மாத்யூ நெடும்பாரா மற்றும் 3 பேர் சார்பில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், 1991ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வீராசமி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் இந்த மனு சவால் செய்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி மீது காவல்துறை நேரடியாக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் எந்த நீதிபதிக்கு எதிராகவும் கிரிமினல் நடவடிக்கையை தொடங்க முடியாது. 1991ம் ஆண்டு வழக்கில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு கொள்கையை மீறுவதாகவும், நீதித்துறையின் பொறுப்புகூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து கவலைகளை ஏற்படுத்துவதாகவும் இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி என்பது அரசியலமைப்பு பதவி என்பதால் அதன் நியமனம் மற்றும் தகுதி நீக்கத்திற்கு நீண்ட நடைமுறைகள் உள்ளன.

* நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்படும் போது அவர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் கேட்பார். அந்த விளக்கத்தில் திருப்தி இல்லாத பட்சத்தில் உள்விசாரணை நடத்தப்படும்.

* உள்விசாரணை குழு, குற்றச்சாட்டில் உண்மையில்லை என கூறும் பட்சத்தில், விசாரணை அதோடு முடிவடைந்து விடும். குற்றம் நிரூபணமானால், தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் சம்மந்தப்பட்ட நீதிபதி அவராகவே பதவி விலகலாம். பதவி விலக மறுத்தால், தலைமை நீதிபதி பரிந்துரை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். அதன் அடிப்படையில் குடியரசு தலைவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்வார்.

* இதுவரை இந்திய நீதித்துறையில் அப்படி எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை. சில நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடந்துள்ளன.

The post அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிடமாற்றம்: ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: