கதுவா: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்ட சர்வதேச எல்லைக்கு அருகே அமைந்துள்ள சன்யால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக எல்லைப் பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்று மாலை முதல் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த கிராமம் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மறைந்திருந்து தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பதிலடி கொடுத்ததாகவும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) நளின் பிரபாத் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் போலீசார் குறிப்பிட்ட வனப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற சில பெண்கள், 5 தீவிரவாதிகளை பார்த்ததாக கூறினர். அவர்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வழியாக எல்லை தாண்டி ஊடுருவி இருக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே ஏழு வயது சிறுமி ஒருவர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிறுமிக்கு ஏற்பட்ட காயத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை’ என்றார். இதுகுறித்து உள்ளூர்வாசி அனிதா தேவி (48) கூறுகையில், ‘எனது கணவர் விறகு சேகரிக்க வனப்பகுதிக்குச் சென்றபோது, ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அவரைப் பிடித்தனர்.
அவர்கள் என் கணவரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு என்னை அருகில் வரச் சொன்னார்கள். ஆனால் என் கணவர் என்னை ஓடிப்போகும்படி சைகை காட்டினார்; அதனால் நான் ஓட ஆரம்பித்தேன். அங்கிருந்த தீவிரவாதிகளில் ஒருவன் என்னைத் தடுக்க முயன்றான்; ஆனால் கூச்சலிட்டதால் அங்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்த மற்ற இரண்டு பேருடன் சேர்ந்து தப்பியோடி வந்துவிட்டோம். இந்த சம்பவம் மாலை 4.30 மணியளவில் (நேற்று) நடந்தது. தற்போது எனது கணவர் உட்பட நாங்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டோம். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தோம். தற்போது அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது’ என்றார்.
The post பாகிஸ்தானில் இருந்து 5 தீவிரவாதிகள் ஊடுருவல்; சர்வதேச எல்லையில் கடும் துப்பாக்கிச் சூடு: விறகு சேகரித்த பெண்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.