சென்னை: 18வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, சூர்யகுமார் 29, தீபக் சாகர் 28 ரன் எடுத்தனர். சிஎஸ்கே பவுலிங்கில் நூர்அகமது 4, கலீல் அகமது 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதி 2, ஷிவம் துபே 9, தீபக் ஹூடா 3, சாம்கரன் 4, ஜடேஜா 17 ரன்னில் வெளியேற கேப்டன் ருதுராஜ் 26 பந்தில் 53 ரன் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா நாட் அவுட்டாக 45 பந்தில் 65 ரன் அடித்தார். 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்த சிஎஸ்கே 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. நூர்முகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நான் அவுட் ஆன பின் கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தது உண்மைதான். எனினும் இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த வெற்றி இன்னும் சிறப்பான முறையில் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் போட்டி இப்படித்தான் செல்கிறது. நான் 3வது வீரராக இறங்குவதற்கு காரணம் அணியின் நன்மைக்காக தான். 3வது வீரராக களம் இறங்கினால் அது அணியின் பேலன்ஸை கூட்டுகிறது. ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடக்கூடியவர். இதனால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கலீல் அகமது அனுபவம் வாய்ந்த வீரராக விளங்கினார். நூர் அகமது, சிஎஸ்கே அணிக்கு ஒரு எக்ஸ் பேக்டராக இருக்கிறார். இதேபோன்று அஸ்வினும் இருக்கிறார்.
டோனி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் இளமையாக தோன்றுகிறார். அவருடைய உடல் தகுதியும் கடந்த ஆண்டைவிட இம்முறை அதிகரித்து இருக்கிறது’’ என்றார். தோல்வி பற்றி மும்பை கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: நாங்கள் 15-20 ரன் குறைவாக எடுத்துவிட்டோம். ஆனால் இளம்வீரர்களின் போராட்டம் பாராட்டத்தக்கது. அறிமுக வீரர் விக்னேஷ் புதூர் அற்புதம். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ருதுராஜ் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார், என்றார்.
டோனி பெரிய நம்பிக்கை அளிக்கிறார்
ஆட்டநாயகன் நூர் அகமது கூறுகையில், “ஆட்டநாயகன் விருது வென்றது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கேவுக்காக விளையாடுவதும், வெற்றிக்கு பங்களிப்பு செய்திருப்பதும் அதைவிட பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூரியகுமார் விக்கெட் மிகவும் சிறப்பானதாக இருந்தது. டோனி அவரை ஸ்டெம்பிங் செய்த விதம் இந்த உலகத்திலேயே கிடையாது. அது நம்ப முடியாத அளவுக்கு வேகமாக இருந்தது. அவர் போன்ற ஒருவர் விக்கெட் கீப்பராக இருப்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது’’ என்றார்.
பிட்ஸ்… பிட்ஸ்…
* ஐபிஎல் வரலாற்றில் மும்பை தொடக்க ஆட்டத்தில் 13வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
* 43 வயதான டோனி, 0.12 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து சூர்யகுமாரை அவுட் ஆக்கி வியப்பில் ஆழ்த்தினார்.
* மும்பை அணிக்காக சூர்ய குமார் 3 ஆயிரம் ரன்னை தாண்டினார். ரோகித்சர்மா 5458, பொல்லார்ட் 4312 ரன்னுடன் முதல் 2 இடத்தில் உள்ளனர்.
* ரோகித்சர்மா ஐபிஎல்லில் 18வது முறையாக நேற்று டக்அவுட் ஆனார். தினேஷ்கார்த்திக், மேக்ஸ்வெல் ஏற்கெனவே 18 முறை டக்அவுட் ஆகி உள்ளனர்.
The post நூர் அகமது அணிக்கு ஒரு எக்ஸ் பேக்டராக இருக்கிறார்: கேப்டன் ருதுராஜ் பாராட்டு appeared first on Dinakaran.