அழிஞ்சமங்கலம் அரசு பள்ளியின் நூற்றாண்டு விழா கல்வி மட்டுமே மாணவர்கள் எதிர்காலத்தை வசந்தமாக்கும்

*நாகை கலெக்டர் ஆகாஷ் பேச்சு

நாகப்பட்டினம் : மாணவர்களின் எதிர்காலத்தை கல்வி மட்டுமே வசந்தகாலமாக மாற்றும் என கலெக்டர் ஆகாஷ் பேசினார்.நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளியின் நூற்றாண்டு தொடக்கவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது: அழிஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப்பள்ளியானது நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் 1922-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் 48-வது பள்ளியாக துவங்கப்பட்டது.

இப்பள்ளியில் அழிஞ்சமங்கலம், செல்லூர், பாலையூர், பழையனூர், சங்கமங்களம் ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி 2000ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாகவும், 2013-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு தற்போது தொடக்கப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளியாகவும் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் மாவட்ட துணை ஆட்சியராகவும், பொறியாளராகவும், மருத்துவராகவும், ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், வழக்கறிஞராகவும் மற்றும் மத்திய, மாநில துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மழலையர் வகுப்பில் 15 மாணவர்களும், தொடக்கப்பள்ளியில் 71 மாணவர்களும், உயர்நிலைப்பள்ளியில் 147 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.

படிக்கும் பருவத்தில் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை வசந்த காலமாக மாற்றும். படிப்பு மட்டுமே சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டி மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கேடயங்கள், சால்வை ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

பின்னர் நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்டனர். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) துரைமுருகு, தனி வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார கல்வி அலுவலர்கள் அன்பரசி, இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post அழிஞ்சமங்கலம் அரசு பள்ளியின் நூற்றாண்டு விழா கல்வி மட்டுமே மாணவர்கள் எதிர்காலத்தை வசந்தமாக்கும் appeared first on Dinakaran.

Related Stories: