பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு செந்தொண்டர் பேரணி

 

திருப்பூர், மார்ச் 24: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பகத்சிங், ராஜகுரு, சுகுதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் செந்தொண்டார் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக தொடங்கிய பேரணியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு, மங்களம் சாலை வழியாக சிட்டி சென்டரில் நிறைவடைந்தது. தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பகத்சிங் ராஜகுரு சுகுதேவ் ஆகியோர் இந்திய தேச விடுதலைக்காக போராடி உயிரை தியாகம் செய்தனர்.

அவர்களை நாம் நினைவு கூற வேண்டும். மதுரையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாடு இந்திய அளவிலான அரசியல் மாற்றங்களை தீர்மானிக்கும் மாநாடாகவும், இந்திய சமூகத்தில் பிரிவினையை உருவாக்கி நவ தாராளமயக் கொள்கையை அமல்படுத்தி வரும் நவ பாசிச பாஜவை வீழ்த்தும் முன்னோட்டமாகவும் இந்த மாநாடு அமையும்’’ என்றார். இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு செந்தொண்டர் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: