துவக்கம் முதல் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்ட அவர்கள் 3 ஓவர் முடிவில் 45 ரன் குவித்தனர். 4வது ஓவர் துவக்கத்தில் அபிஷேக் 24 ரன்னில் (5 பவுண்டரி) தீக்சனா பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின் வந்த இஷான் கிஷணும் அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் அவர்கள் வெளுத்து வாங்கியதால் ரன்கள் மளமளவென குவியத் துவங்கின. பவர் பிளேவான 6 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்திருந்தது.
6.4 ஓவரில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. டிராவிஸ் ஹெட், 21 பந்துகளில் 50 ரன்னை எட்டினார். அதன் பின்னும் அதிரடி காட்டிய அவர், 9.3வது ஓவரில் தேஷ்பாண்டே பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் தந்து, 67 ரன்னில் (3 சிக்சர், 9 பவுண்டரி) வெளியேறினார். பின், நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். 14.1 ஓவரின்போது, நிதிஷ் விரட்டியடித்த பவுண்டரி மூலம், சன்ரைசர்ஸ், 200 ரன்களை கடந்து, ஐபிஎல்லில், இரட்டைச்சதம் விளாசிய முதல் அணியாக உருவெடுத்தது. சிறப்பான அந்த தருணத்தில், தீக்சனா வீசிய அடுத்த 2வது பந்தில், ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் தந்து நிதிஷ் குமார் (30 ரன்) அவுட்டானார்.
அதன் பின், ஹென்றிச் கிளாசன் அரங்கில் நுழைந்தார். அவரும் அதிரடியை தொடர, 17.4 ஓவரில் சன்ரைசர்ஸ், 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை அநாயாசமாக கடந்தது. அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த கிளாசன், 34 ரன்னுக்கு அவுட்டானார். 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசிய இஷான் கிஷண், அதன் தொடர்ச்சியாக 2 ரன் அடித்து 100 ரன்னை (47 பந்து, 6 சிக்சர், 11 பவுண்டரி) எட்டி சாதனை படைத்தார். இதனான் மூலம் ஐபிஎல் 18வது சீசனில் முதல் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணியினர் உற்சாகமாக இந்த சாதனையை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், கடைசியாக வீசப்பட்ட 20வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளாக, அனிகேத் வர்மாவும், அபினவ் மனோகரும் அவுட்டாகினர். இன்னிங்சின் கடைசி பந்தில் இஷான் பவுண்டரி அடிக்க, 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்னுடன் சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இஷான் கிஷாண் ஆட்டமிழக்காமல் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். சன்ரைசர்ஸ் ஸ்கோரில், 12 சிக்சர்கள், 34 பவுண்டரிகள் அடங்கும்.
அதைத் தொடர்ந்து 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் சஞ்சு சாம்சனும் ஆடத் துவங்கினர். 2வது ஓவரில் அணியின் ஸ்கோர் 20 ஆக இருந்தபோது, ஜெய்ஸ்வால் (1 ரன்), சிமர்ஜீத் சிங் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். சிமர்ஜீத் வீசிய அதே ஓவரில் கேப்டன் ரியான் பராக் (4 ரன்), கம்மின்சிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதன் பின் நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் 11 ரன்னில் அவுட்டாக, 50 ரன்னில் 3 விக்கெட் இழந்து ராஜஸ்தான் அணி பரிதாப நிலையில் இருந்தது.
இருப்பினும், பின் வந்த துருவ் ஜுரெல், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 14வது ஓவர் முடிவில் சஞ்சு சாம்சன் (37 பந்தில் 66 ரன்), ஹர்சல் படேல் பந்தில் கிளாசனிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 15வது ஓவரை வீசிய ஆடம் ஜம்பா, துருவ் ஜுரெலை, 70 ரன்னில் வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழந்து 242 ரன் எடுத்தது. அதனால், 44 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றது. சன்ரைசர்ஸ் தரப்பில், சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல் தலா 2, ஆடம் ஜம்பா, முகம்மது ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
* ஐபி எல் சன்ரைசர்ஸ் சரித்திரம் படைத்து சாதனை வெற்றி
ஐபில் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணியாக சன்ரைசர்ஸ் திகழ்கிறது. கடந்த 2024ல் நடந்த ஐபிஎல் சீசனில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்ததே, ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச சாதனையாக திகழ்கிறது. அதற்கு முன்னதாக மும்பையுடன் நடந்த போட்டியிலும், சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது 2வது அதிக ரன் சாதனையாக உள்ளது. கடந்த சீசனில், டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 272 ரன் குவித்தது 3வது அதிக ரன் சாதனையாகவும், டெல்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 266 ரன் குவித்தது 4வது அதிக ரன் சாதனையாகவும் உள்ளது.
இந்நிலையில், தற்போதைய சீசனின் 2வது போட்டியில், தனது முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணி 286 ரன் குவித்து மகத்தான வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஏற்கனவே தான் படைத்த சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தும் 2 ரன் வித்தியாசத்தில் அந்த சாதனையை சன்ரைசர்ஸ் அணி கை நழுவ விட்டுள்ளது. இருப்பினும், நடப்பு சீசனில் அதிகபட்ச ரன் குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இந்த சாதனை, ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிக ரன் குவிப்பாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல் மூன்று அதிகபட்ச ரன் குவிப்பு சாதனைகளை படைத்த ஒரே அணியாக சன்ரைசர்ஸ் திகழ்கிறது.
The post கொஞ்சம் ஆறு நிறைய ஃபோரு இஷான் நூறு: ராஜஸ்தான் போராட்டம் வீண் appeared first on Dinakaran.