கேகேஆரை சாய்த்து வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி; கோஹ்லி போன்ற ஜாம்பவானுக்கு கேப்டனாக இருப்பது பெருமை: கேப்டன் ரஜத் படிதார் பேட்டி

கொல்கத்தா: 18வது சீசன் ஐபிஎல் தொடர் கொல்கத்தாவில் நேற்று பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- ஆர்சிபி மோதின. முதலில் பேட் செய்த கேகேஆர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 56, சுனில் நரேன் 44 ரன் எடுத்தனர். ஆர்சிபி பவுலிங்கில் க்ருணால் பாண்டியா 3, ஹேசல்வுட் 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 56, கேப்டன் ரஜத் படிதார் 34, தேவ்தத் படிக்கல் 10, ரன்னில் வெளியேற கோஹ்லி நாட் அவுட்டாக 39 பந்தில் 59 ரன் விளாசினார். 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்த ஆர்சிபி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. க்ருணல் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், “ஆர்சிபி அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குவது நிச்சயம் எனக்கு ஒரு விதம் அழுத்தம் தான். ஆனால் இன்று எனக்கு சிறந்த நாளாக அமைந்தது. இதேபோல் பல சிறந்த நாள் அமையும் என நம்புகிறேன். ரஸ்சல் விக்கெட்டை விரைவில் எடுக்க வேண்டும் என நினைத்தோம். இதனால் தான் சுயாஷ் சர்மாவை பந்துவீச அழைத்தேன். அவர் எவ்வளவு ரன் விட்டுக் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களின் முக்கிய ஸ்ட்ரைக் பவுலர் அவர்தான். இதனால் அவருக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம். வெற்றி பெற்றதற்கு முழு காரணம் க்ருணல் பாண்டியா ஆகும். கோஹ்லி போன்ற ஜாம்பவானுக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக இருந்தது. எனக்கு அவர் முழு ஆதரவை வழங்கினார்’’ என்றார்.

இந்த இலக்கு போதுமானதாக இல்லை;
தோல்வி குறித்து கேகேஆர் கேப்டன் ரகானே கூறுகையில், “13வது ஓவர் வரை நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட் இழந்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. நானும் வெங்கடேசும் களத்தில் நிற்கும்போது 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அதை எட்டி விடலாம் என நினைத்தோம். ஆனால் அதன் பிறகு விக்கெட் விழுந்ததால் தலைகீழாக மாறிவிட்டது. கொஞ்சம் பனிப்பொழிவும் பந்துவீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த இலக்கு போதுமானது இல்லை’’ என்றார்.

வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி: க்ருணல்பாண்டியா
3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற க்ருணல்பாண்டியா கூறுகையில், “என் பந்தில் அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய நல்ல பந்துகளில் தான் அவர்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவாகவேண்டும். இன்று அணியின் வெற்றிக்காக உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டம் செல்லும் திசை நோக்கி நாமும் செல்ல வேண்டும். தொடர்ந்து சிக்சர்களை அடிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை வளர்த்து வருகிறார்கள். எனவே பவுலர்களும் அதற்கு ஏற்றார் போல் தங்கள் திறனை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால்தான் நான் பந்துகளின் வேகத்தை அதிகப்படுத்தினேன். பொதுவாக வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீசுவார்கள். ஆனால் நானும் அதை இன்று முயற்சி செய்து பார்த்தேன். ஆர்சிபி அணிக்காக ஆடுவது அபாரமாக இருக்கிறது. நான் பெங்களூருவில் சாதாரண உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்தாலே அங்கு இருக்கும் ரசிகர்கள் ஆர்சிபி ஆர்சிபி என்று கத்துவார்கள். நான் இந்த அணிக்கு வந்து 10 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது’’ என்றார்.

The post கேகேஆரை சாய்த்து வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி; கோஹ்லி போன்ற ஜாம்பவானுக்கு கேப்டனாக இருப்பது பெருமை: கேப்டன் ரஜத் படிதார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: