திருவனந்தபுரம்: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் இந்தியா அசுர வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா அட்டகாச வெற்றிகளை பெற்று அசுர பலத்துடன் உள்ளது. இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கவுள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு, இலங்கை அணி, வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீராங்கனை ஷபாலி வர்மா அட்டகாச ஃபார்மில் உள்ளார். தவிர, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ் போன்ற வீராங்கனைகளும் நேர்த்தியாக ஆடி வருகின்றனர். அதனால், கடந்த 3 போட்டிகளில் இந்தியா 15 ஓவர்களுக்குள் வெற்றியை சுவைத்துள்ளது;
இலங்கை அணியால், 3 போட்டிகளிலும் அதிகபட்சமாக 129 ரன் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் திறனுக்கு சாட்சியாக, கடந்த 3 போட்டிகளிலும், 3 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சால், இலங்கை அணியின் பேட்டர் எவராலும் 40 ரன்னுக்கு மேல் தாண்ட முடியாத நிலை காணப்படுகிறது.
இன்றைய போட்டியிலும் இந்தியா தனது வல்லமையை மீண்டும் நிரூபித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் இளம் வீராங்கனைகளான தமிழகத்தின் கமாலினி குணாளன், அனுபவம் வாய்ந்த ஹர்லீன் தியோல் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படலாம். சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை அணியின் பேட்டர்கள் நடப்பு தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
அந்த அணியின் ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, ஹர்சிதா சமரவிக்ரமா ஆகியோர் திறமை வாய்ந்தவர்களாக இருப்பினும், இதுவரை அவர்களது பேட்டிங் இந்திய மண்ணில் ஜொலிக்காதது இலங்கை அணிக்கு துரதிருஷ்டமே. இன்றைய போட்டியில் இலங்கை பேட்டர்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கணக்கை துவக்க முனைப்பு காட்டினால் போட்டி சுவாரசியமானதாக இருக்கும்.
