சேப்பாக்கத்தில் இன்று மும்பையுடன் மோதல்; இந்த ஆண்டு எங்கள் பவுலிங் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

சென்னை: 18வது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2வது நாளான இன்று 2 லீக் போட்டிகள் நடக்கிறது. மாலை ஐதராபாத்தில் தொடங்கி நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகின்றன. இரவு 7.30 மணிக்கு சென்னை சோப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 3வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. ஐபிஎல்லில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்த 2 அணிகளும் மோதும் போட்டியை தான்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியில் டோவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ஜடேஜா, டோனி, அஸ்வின், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹ்மத், பதிரானா மற்றும் இம்பாக்ட் பிளேயராக விஜய் சங்கர் அல்லது கலீல் அகமது இடம் பெறக்கூடும். சிஎஸ்கே சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு இன்றைய போட்டியில் ஆட தடையால் சூர்யகுமார் வழி நடத்துகிறார். ரோகித்சர்மா, திலக்வர்மா, நமன்தீர், ரியான் ரிக்கல்டன் பேட்டிங்கில் மிரட்டலாம். பவுலிங்கில் பும்ரா இல்லாத நிலையில் போல்ட், தீபக் சாகர், மிட்செல் சான்ட்ரையே நம்பி உள்ளது. சென்னை பிட்ஸ் ஸ்லோவாக இருக்கும் என்பதால் இரு அணிகளும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வாய்ப்பு அதிகம்.

டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இன்றைய போட்டிக்கு முன் ரசிகர்களை மகிழ்விக்க அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனிடையே இன்றைய போட்டி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நிலைமை எங்களுக்கேற்ப இருந்தால், எதிரணிக்கு இது பெரிய சவாலாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட நாளில் ஆடுகளத்தின் நிலையைப் பொறுத்து மட்டுமே நாம் பிளேயிங் லெவனை முடிவு செய்யலாம். அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த ஆண்டின் பந்துவீச்சுத் தாக்குதல் எதிரணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். யார். யார் ஓபனிங் வீரர்களாக விளையாடுவார்கள் என்பது முடிவாகி விட்டது. ஆனால் அதை இங்கு தெரிவிக்க முடியாது.

தொடக்க வீரர்களின் இணை முந்தைய ஆட்டங்களை போன்று இருக்கும். எங்கள் அணியில் அனைவரும் முதல் மூன்று இடங்களில் ஆடக்கூடியவர்கள். ரச்சின் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ராகுல் திரிபாதியும் திறன்மிக்க வீரர். எங்களுக்கு நிறைய ஆப்சன்கள் இருக்கிறது. நாங்கள் எடுத்த முடிவை நாளை (இன்று) நீங்கள் அறிவீர்கள். ரச்சின் நல்ல உடல் நிலையில் இருக்கிறார். ஏலத்தில் சரியான பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். பதிரானா அணியில் இருப்பது நன்றாக உள்ளது” என்றார்.

இன்று டோனி ஓய்வு அறிவிப்பா ?
இன்றைய ஆட்டத்துடன் டோனி ஓய்வு அறிவிப்பார் என தகவல் பரவி வரும் நிலையில் ருதுராஜ் கூறுகையில், டோனி ஏற்கனவே ‘இம்பாக்ட் வீரர்’ தான். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அத்தனை வீரர்களும் உத்வேகம் பெறுகிறோம். அவர் பந்துகளை கனெக்ட் செய்து அடிக்கும் அளவுக்கு, எங்களால் கூட அடிக்க முடியவில்லை. 43 வயதில் அணிக்காக அவர் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியது. அவர் அணிக்காக செய்யும் பணியை அப்படியே தொடர்ந்து செய்வார். பயிற்சியில் மிகவும் தீவிரமாக உள்ளார், எவ்வளவு அதிகமாக சிக்சர்கள் அடிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார். அவரை உடல்நிலை குறைந்ததாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. சச்சின் கூட 50 வயதில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே டோனி இன்னம்பல ஆண்டுகள் ஆடுவார் என நினைக்கிறேன், என்றார்.

இதுவரை நேருக்கு நேர்…
* ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 37 முறை மோதி உள்ளன. இதில் சிஎஸ்கே 17, மும்பை 20ல் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளிலும் சிஎஸ்கே தான் வென்றுள்ளது.
* சேப்பாக்கத்தில் சிஎஸ்கே இதுரை 75 போட்டிகளில் ஆடி 51ல் வெற்றி, 23ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்திருக்கிறது.
* ஒட்டுமொத்தமாக சேப்பாக்கத்தில் 85 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 47, சேசிங் அணி 36ல் வென்றுள்ளன. 2 போட்டி டையில் முடிந்துள்ளது.

The post சேப்பாக்கத்தில் இன்று மும்பையுடன் மோதல்; இந்த ஆண்டு எங்கள் பவுலிங் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: