பொள்ளாச்சி : பொள்ளாச்சி பிஏபி திட்டத்தில் முக்கிய நீராதாரமாக உள்ள ஆழியார் அணைக்கு பீடர் கால்வாய் மற்றும் அப்பர் ஆழியார், குரங்கு அருவி மற்றும் நீரோடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில் கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்ததால், மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர் மட்டம், கடந்த ஜனவரி மாதம் வரை 100 அடிக்கும் மேலாக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு, நாள் குறைந்து கொண்டிருந்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. நேற்றைய, நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70 ஆக குறைந்துள்ளது.
வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும், பழைய ஆயக்கட்டு பாசன பகுதி, கேரளாவுக்கும், குடிநீர் தேவைக்கும் என வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவது தொடர்ந்துள்ளது.
ஆழியார் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்து வருவதால், அணை மதகு அருகே மற்றும் கரையோரங்களில் உள்ள பாறை மேடு, மணல் மேடுகள் வெளியே தெரிந்து வறண்ட நிலம் போல் உள்ளது.
ஆழியார் அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்னும் குறிப்பிட்ட வாரம் மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் திறப்பு இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மழைப்பொழிவின்றி ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைத்துள்ளனர்.
பல மாதமாக முழு அடியையும் எட்டியிருந்த ஆழியார் அணை நீர் மட்டம் தற்போது மிகவும் குறைந்துள்ளதால் வருங்காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போதிய மழையில்லாததால் ஆழியார் அணை நீர் மட்டம் 70 அடியாக சரிவு appeared first on Dinakaran.