சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18ம் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 19ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது. 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘இன்று (நேற்று) மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே. ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது. எனவே வரும் 21ம் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காஜி தாவூத் கைஸர் வெளியிட்ட அறிவிப்பில், ”தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை. எனவே ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் சனிக்கிழமை (நாளை) ஈகை திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
