ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனையானது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதில், மாட்டுச்சந்தை கூடும்போது, அதன் அருகேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்
இந்நிலையில், வரும் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், இன்று நடந்த சந்தை நாளில் ஆடு வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதிலும், ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறியாடு என இருவகை ஆடுகள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

மேலும் சிலர், ஆட்டு குட்டிகளை விற்பனைக்காக அதிகளவு கொண்டு வந்திருந்தனர். பொள்ளாச்சி சந்தையில் ஆடுகளை வாங்க சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர். இதில் 8கிலோ எடைக்கொண்ட ஒரு ஆடு 6500 முதல் ரூ.7000 வரையிலும், 20கிலோ எடைகொண்ட ஆடு ஒன்று ரூ.16ஆயிரம் முதல் ரூ.18ஆயிரம் வரையிலும், சுமார் 30கிலோ எடைகொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.27ஆயிரம் வரையிலும் என தரத்திற்கேற்ப விலைபோனது. இன்று ஒரே நாளில் ரூ.1. 50 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

Related Stories: