திருநங்கையை அரவாணி என்பதா..? ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் சுயமரியாதையை காயப்படுத்துகிறது: திருநர் பேரவையினர் வேதனை 

கோவை: ஒன்றிய அரசு கடந்த 12ம் தேதி கொண்டு வந்துள்ள திருநர் திருத்த மசோதாவில் திருநங்கைகள், திருநர்கள் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகை எதுவும் கிடையாது என்றும், இழிவுபடுத்தும் விதமாகவே திருத்த சட்ட மசோதா கொண்டு வந்திருப்பதாகவும் தேசிய திருநர் பேரவையின் உறுப்பினரான திருநங்கை கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் நேற்றுமுன்தினம் கல்கி சுப்பிரமணியம் கூறியதாவது: 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் கூறப்பட்ட இட ஒதுக்கீடு திருநங்கை சமூகத்தினருக்கான வீடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை திருநங்கை, திருநர்கள் சமூகத்துக்கு வழங்கியது. அதில் சுய அடையாள உரிமை, கல்வி, சட்டப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருந்தது. இந்நிலையில், ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திரகுமார் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள சட்டத் திருத்த மசோதா, திருநங்கை சமூகத்தின் அடையாளத்தையே அழிப்பதாக உள்ளது.

திருநங்கை ஒருவர் தனது பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள அரசு சான்றிதழ் பெற வேண்டுமெனில் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற விதிமுறை, மனித மரியாதையை மீறும் செயல். ஆண் அல்லது பெண் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இத்தகைய பரிசோதனை தேவையில்லை. ஆனால் திருநங்கைகளுக்கு மட்டும் இப்படியான நிபந்தனை விதிப்பது பாகுபாடு.திருநங்கை சமூகத்துக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, இட ஒதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைகள் குறித்து எந்தத் தெளிவான திட்டமும் இல்லாமல், தண்டனைகளை மட்டுமே அதிகமாக கவனத்தில் கொள்ளும் விதமாக இந்தத் திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருநங்கை மக்களை கடத்தி கட்டாய பிச்சை எடுக்கவைத்தல் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு மிகக் குறைந்த தண்டனை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இந்த மசோதாவில் “திருநங்கை” என்ற மரியாதையான தமிழ்ச்சொல்லுக்கு பதிலாக “அரவாணி” என குறிப்பிடப்பட்டுள்ளது. திருநங்கை என்பது மத சார்பற்ற, மரியாதையான அடையாளம். அதையே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் திருநங்கை பிரதிநிதிகள் ஒன்றிய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டிருந்தாலும், இந்த சட்டத் திருத்தம் குறித்து அவர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும், குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் விரைவில் போராட்டங்கள் தீவிரமடையும். இந்த சட்டத் திருத்தம் எங்கள் சுயமரியாதையை காயப்படுத்துகிறது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: