திருச்செங்கோடு: நாமக்கல் சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் கல்லூரி அருகே நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த டெலிவரி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேன், சேலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. பெரிய வியாபாரிகளிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகளை வாங்கி, மற்ற ஊர்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வந்தனர். சோதனையில் ரூ.2.39 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் பாக்கெட்டுகளாக இருந்தது. அந்த பாக்கெட்டுகளில் நகைகளை கொண்டு செல்ல வேண்டிய முகவரியும் இருந்தது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன், இந்த டெலிவரி வேன் வந்து கொண்டிருந்தது. பறக்கும் படையினர் இந்த நகைகளை கைப்பற்றி, திருச்செங்கோடு ஆர்டிஓ லெனின் வசம் ஒப்படைத்தனர். நகைகளை கொண்டு வந்த பாபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
