காவேரிப்பட்டணம் : காவேரிப்பட்டணம் பகுதியில் குற்றச்செயல்களில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆண்டுக்கணக்கில் அப்படியே கிடக்கும் நிலையில், துருபிடித்து வீணாகி வருகிறது.
அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவேரிப்பட்டணம் நகரில், தர்மபுரி செல்லக்கூடிய சாலையில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷன் அருகில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது.
போலீசார் குடும்பத்துடன் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த குடியிருப்பு அருகிலேயே வழக்குகளில் பிடிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், கார், சரக்கு வேன்கள், அந்த பகுதியில நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட ஆண்டுகளாக அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும், அந்த பகுதியில் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் காணப்படுகின்றன. இதனால், சுற்றியுள்ள போலீஸ் குடியிருப்பு மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, வழக்குகளில் பிடிக்கப்பட்டுள்ள வாகனங்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்கு பல ஆண்டுகளாக வழக்குகளில் பிடிக்கப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன.
இதனால், அந்த பகுதி புதர் மண்டியவாறு காணப்படுகிறது. அப்பகுதியில் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, அந்த வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்திட வேண்டும். மேலும், அந்த இடத்தில், செடிகள், மரங்கள் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.
The post காவேரிப்பட்டணம் போலீஸ் குடியிருப்பில் துருபிடித்து வீணாகி வரும் வாகனங்கள் appeared first on Dinakaran.