மாநில மொழிக் கொள்கை உருவாக்குவதற்கான நீதிபதி முருகேசன் அறிக்கை பரிசீலனையில் உள்ளது: ஜி.கே.மணிக்கு முதல்வர் பதில்

சென்னை: தமிழை கட்டாயப் பாடமாக்குவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜி.கே.மணி பேசினார், அப்போது அவர் எழுப்பிய கேள்விக்கு மாநில மொழிக் கொள்கை உருவாக்குவதற்கான நீதிபதி முருகேசன் அறிக்கையை வெளியிடுவதற்கான பரிசீலனையில் உள்ளது என்று ஜி.கே.மணிக்கு முதல்வர் பதில் தெரிவித்தார்.

* தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பெண்ணாகரம் ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது: தாய்மொழிப் பாடத்தை தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பது இல்லை என்பது வேதனை தான். இது பயிற்றுமொழி, பாடமொழி என இரண்டு வகையாக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். தமிழ் கட்டாயப் பாடமாக்கும் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு இன்றுவரை நிலுவையில் இருக்கிறது.

அதற்கு அரசு, உச்ச நீதிமன்றத்தில் இருக்கிற வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நல்ல தீர்ப்பினைப் பெற வேண்டும். மேலும், மாநில மொழிக் கொள்கை உருவாக்குவதற்கு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி முருகேசன் அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டார்கள். இன்னும் நீங்கள் அறிவிப்பை வெளியிடவில்லை. மாநில மொழிக் கொள்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

* அமைச்சர் தங்கம் தென்னரசு: மொழிக் கொள்கை குறித்து ஆய்வதற்காக நீதிபதி முருகேசன் தலைமையிலே குழு அமைக்கப்பட்டிருப்பதாக சொன்னார். அது மொழிக் கொள்கைக்காக ஏற்பட்டிருக்கக்கூடிய கமிட்டி அல்ல. மாநில கல்விக் குழுவிற்காக அமைக்கப்பட்டது.

* முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜி.கே.மணி சொல்வதுபோல மாநில கல்விக் குழுவை பொறுத்தவரையில் நீதிபதி முருகேசன் அரசிடம் ஒப்படைத்தது உண்மைதான், மறுக்கவில்லை. அது பரிசீலனையில் இருக்கிறது.

* ஜி.கே.மணி: அரசினுடைய கொள்கையை வரவேற்கிறேன். மும்மொழிக் கொள்கை கூடாது என்பதிலே பாமகவும் உறுதியாக இருக்கிறது. திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு தீர்மானத்தை இங்கே சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். தமிழ் கட்டாயப் பாடமாக்குவதற்கு, அதற்கும் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post மாநில மொழிக் கொள்கை உருவாக்குவதற்கான நீதிபதி முருகேசன் அறிக்கை பரிசீலனையில் உள்ளது: ஜி.கே.மணிக்கு முதல்வர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: