2 இடங்களில் என்கவுன்டர் சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை: ஆயுத குவியல் சிக்கியது; போலீஸ்காரர் வீர மரணம்

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் நேற்று நடந்த இருவேறு என்கவுன்டர் சம்பவங்களில் மொத்தம் 30 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீஸ்காரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் தண்டேவாடா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் இணைந்த கூட்டுக்குழு கங்கலூர் பகுதியில் தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. காட்டுப்பகுதியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் பாதுகாப்பு படையினர் சென்றபோது பதுங்கி இருந்த நக்சல்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் போலீஸ்காரர் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் காட்டுப்பகுதியில் மறைந்து தாக்குதல் நடத்திய நக்சல்களுக்கு எதிராக கடுமையான துப்பாக்கி சூடு நடத்தினார்கள். காலை தொடங்கிய தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கை பிற்பகல் வரை நீடித்து மாலை வரை தொடர்ந்தது. இந்த என்கவுன்டரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது காயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். சம்பவ இடத்தில் இருந்து 26 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் அங்கிருந்து துப்பாக்கிகள், ஆயதங்கள், ஏராளமான வெடிப்பொருட்கள் கொண்ட ஆயுத குவியல் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த என்கவுன்டர் கான்கர் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்தது.

மாவட்ட ரிசர்வ் போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையை அடுத்து 4 நக்சல்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கான்கரில் நடந்த துப்பாக்கி சூட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.என்கவுன்டர் நடந்த இரண்டு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நீடித்து வருகின்றது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த என்கவுன்டர் சம்பவங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூர், கான்கர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் மட்டும் 97 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மற்றொரு பெரிய வெற்றி
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இந்த இரண்டு என்கவுன்டர் சம்பவங்கள் மூலமாக நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான முன்னேற்றத்தில் பாதுகாப்பு படையினர் மற்றொரு பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். பிரதமர் மோடி அரசு நக்சலைட்டுக்களுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகின்றது. மேலும் சரணடைதல் முதல் சமூகமயமாக்கல் வரை அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டபோதிலும் சரண் அடைவதற்கு தயாராக இல்லாத நக்சல்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்பு தன்மை கொள்கையை அரசு கடைப்பிடித்து வருகின்றது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாடு நக்சலைட் இல்லாத நாடாக மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 2 இடங்களில் என்கவுன்டர் சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை: ஆயுத குவியல் சிக்கியது; போலீஸ்காரர் வீர மரணம் appeared first on Dinakaran.

Related Stories: