பெங்களூரு : கர்நாடகாவில் மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 90,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்மொழி கொள்கையை திணிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்றாம் மொழிப் பாடமாக, தேர்ந்தெடுத்த இந்தியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் நலன்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளுடன் ஒத்துப்போகும் ஒன்றை தேர்வு செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக, இந்தி மொழியை மூன்றாம் மொழியாக தேர்வு செய்ய கட்டாயப்படுத்தியதே மாணவர்கள் தோல்விக்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவித்ததை அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஆறாம் வகுப்பு முதல், மூன்றாம் மொழியாக இந்தியை படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தி மொழியில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உள்ளதாகவும் மூன்றாம் மொழியாக இந்தியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாததாலும், மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தது அதிகமாகியுள்ளதாக அந்த நாளேடு எடுத்துரைத்துள்ளது.
கன்னடம் பேசும் மாணவர்கள் மீது இந்தியை திணிப்பது நடைமுறைக்கு ஏற்றது இல்லை
என்றும் ஏனெனில் மாணவர்களில் பெரும்பாலோனோர் பள்ளியை தாண்டி இந்திய மொழியை
கற்க வாய்ப்பில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அரசு தொடக்க பள்ளிகளில் இந்தி ஆசிரியர்கள் மிகக்குறைவாக உள்ளதாகவும் 3வது மொழியாக இந்தியை திணிப்பதன் மூலம் மாணவர்களின் தாய்மொழியான கன்னடம் மற்றும் 2வது மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில் கற்றல் திறன் குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
The post கர்நாடகா SSLC தேர்வில் மூன்றாவது மொழியான இந்தியில் 90,000 பேர் தோல்வி : மும்மொழி கொள்கையை விமர்சிக்கும் கல்வியாளர்கள் appeared first on Dinakaran.