ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் 3,100 ஆண்டு பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இது ஆதி சிதம்பரம், உலகின் முதல் சிவன் கோயில், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற திருத்தலம், ராவணன், மண்டோதரிக்கு திருமணம் நடந்த ஸ்தலம், விலைமதிக்கத்தக்க ஒற்றைக்கல்லால் ஆன பச்சை நிற மரகத நடராஜருக்கு ஆண்டுக்கொருமுறை நடக்கும் ஆருத்ரா தரிசனம் என பல சிறப்பை பெற்றது. கோயில் வளாகத்தில் மாணிக்கவாசகர் சன்னதிக்கு பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் மாணிக்கவாசகர் முன்பு அக்னி பிழம்பாக(நெருப்பு) தோன்றிய சிவபெருமான், மாணிக்கவாசகரை தவிர்த்து 999 தவ முனிவர்கள் மாண்டு முக்திபேரு அடைந்த தீர்த்தம் என்பதால் இது அக்னிதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில் கோயிலுக்கு குடமுழுக்கு வருகின்ற ஏப்.4ம் தேதி நடக்கிறது. கோயிலுக்கு குடமுழுக்கு மற்றும் மராமத்து பணிகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையொட்டி கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோயிலில் பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சேதுபதி சமஸ்தானம், தேவஸ்தானம் சார்பில் உள்பிரகாரம் மண்டபங்கள், சிலைகள், சிற்பங்கள், தூண்கள் உள்ளிட்டவற்றில் மராமத்து பணிகள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
தொடர்ந்து கோயில் தெப்பக்குளத்தில் உள்ள குவிமாடங்களுடன் கூடிய கோபுர அமைப்புகளை உடைய மண்டபங்கள், படிக்கட்டுகள், சுற்றுச்சுவர்களில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம், தெப்பக்குளத்தில் இருந்த தண்ணீர் பம்புசெட் குழாய் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் குளம் காலியாக இருந்தது. இதில் கடந்த 6 மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. 16 பாறை படிகளால் அமைக்கப்பட்டு 40 அடி ஆழம் கொண்ட இந்த தெப்பக்குளம் 230 கனஅடி கொள்ளளவை கொண்டது. பெரும்பாலும் தெப்பக்குளங்களின் தரைப்பகுதி மண் பரப்பில் மட்டமாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த தெப்பக்குளம் வற்றிவிடக் கூடாது என்பதற்காக கிணறு போன்று இயற்கையாகவே தண்ணீர் ஊற்றுகள் ஊறும்படி அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டிட கலைக்கு உதாரணமாக விளங்குகிறது.
ஊற்றுகளை சுற்றி கடற்பாறைகள் போடப்பட்டு, மீன்களின் இருப்பிட வசதிக்காக வட்ட வடிவிலான சிறிய பள்ளங்கள் ஆயிரக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த தெப்பக்குளம் பாண்டியர்கள் கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறது. கோயிலில் பண்டைய காலம் முதலே மழைநீர் சேகரிப்பு முறையில் உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், தற்போது இப்பகுதியில் பெய்து வரும் மழைக்கு கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் பெருகி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க புனித தீர்த்தமான இக்குளம் வறட்சி ஏற்பட்ட காலங்களில் கூட முழுமையாக வற்றியது கிடையாது, மராமத்து பணிக்காக தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, தற்போது மழைநீர் பெருகினாலும் கூட, ஆகம விதி மற்றும் மண் தன்மைக்கேற்ப தெப்பக்குளம் நீர் தற்போது கடல் நீர் சுவை போன்று காணப்படுகிறது.
மழைநீரால் குளம் நிரம்பி வந்தாலும் உப்புத்தன்மை மாறாமல் இருப்பதால், நல்ல தண்ணீர் மற்றும் உப்பு தண்ணீரில் வாழும் மீன்களும் இருப்பது தனிச்சிறப்பு. கோடைக்காலம் துவங்கி விட்ட நிலையில், மாவட்டத்தில் குளம், கண்மாய்களில் தண்ணீர் வற்றி வரும் நிலையில், கோயிலில் குடமுழுக்கு நடப்பதையொட்டி, காலியாக கிடந்த தெப்பக்குளத்தில் தற்போது மழை பெய்து, மழைநீர் பெருகி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பக்தர்கள் பரவசம்
மங்களேஸ்வரி அம்பாள் சன்னதி நுழைவாயில் முன்பு மங்கள விநாயகர் சன்னதி உள்ளது. இதற்கு முன்பு மங்கள தீர்த்தம் கிணறு உள்ளது. இதில் மூலவர், அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதற்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. பூதக்கணங்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் சுமார் 15 அடி ஆளம் கொண்ட கிணற்றில், தற்போது 10 அடிக்கு மேல் மழைநீர் நிரம்பி கிடக்கிறது. தண்ணீர் நிரம்பி கிடப்பதால் குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு நலன் கருதி இரும்பு கம்பி வலை போடப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பக்தியுடன் பார்த்து வருகின்றனர்.
The post கோடை வறட்சியிலும் மழையால் நிரம்பிய மங்களநாதர் கோயில் தெப்பக்குளம் appeared first on Dinakaran.