கட்சியில் இருந்து நீக்க புதிய வியூகம்: செங்கோட்டையனுக்கு செக் வைக்க மைத்துனரை களமிறக்கிய எடப்பாடி; சொந்த ஊரில் எதிர்ப்பை கொண்டு வர நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை

சேலம்: செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க மைத்துனரை எடப்பாடி களமிறக்கி உள்ளார். அவர் மூலம் நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தி செங்கோட்டையனுக்கு சொந்த ஊரில் எதிர்ப்பை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.  தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் கட்சிக்கு எதிராக எந்தநேரத்திலும் குரல் கொடுத்தது கிடையாது. ஆனால், தற்போது தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தெரிவிக்கும் மாறுபட்ட கருத்துகளும், அவர் தலைமையில் நடக்கும் நிகழ்வுகளை புறக்கணிப்பதும் அதிமுகவினர் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. எடப்பாடியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் பாஜ தலைவர்களுடன் நெருக்கம் காட்டுவது, பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவது, சபாநாயகரை தனியாக சந்தித்து பேசியது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரத்தில் எடப்பாடி அழைக்கும் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். சட்டப்பேரவையில் எடப்பாடியை சந்திப்பதையும், எம்எல்ஏ கூட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்க்கிறார். இதற்கிடையே, செங்கோட்டையன் நாகரிகம் இல்லாதவர் என்று வைகை செல்வன் கூறியதால் டென்ஷனான ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மூத்த தலைவர்கள் வார்த்தை போரால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செங்கோட்டையனை சமரசம் செய்ய மூத்த நிர்வாகிகள் மூலம் எடப்பாடி முயற்சித்தார். அவர்கள் செங்கோட்டையனை தனியாக சந்தித்து பேசி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் இருவருக்கும் இடையே மோதல் தொடர்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க துடிக்கும் பாஜவுக்கு எடப்பாடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் எடப்பாடி சமூகத்தை சேர்ந்த செங்கோட்டையனை முன் நிறுத்தி தேர்தலை சந்திக்க பாஜ திட்டமிட்டு, அதிமுக 2ம் கட்ட தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறது. அதன்படி, அதிமுக மாஜி அமைச்சர்கள் பலர் செங்கோட்டையனை முன் நிறுத்த சம்மதம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மூத்த நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து, எடப்பாடியை எதிர்க்க உங்களால் தான் முடியும்.

அதற்கான சக்தி உங்களுக்குத்தான் இருக்கிறது. எனவே, நீங்கள் அவருக்கு எதிரான குரலை எழுப்புங்கள். பல்வேறு நெருக்கடி வரும். ஆனால், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தான் தனக்காக எதையும் எதிர்பாராத செங்கோட்டையன் கட்சியின் ஒற்றுமைக்காக குரல் எழுப்பினார். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் டெல்லி பாஜவிடம் சிக்கியிருக்கிறது.

இதன் காரணமாகவும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவருமே பாஜவுடன் கூட்டு சேரவேண்டும் என உறுதியாக உள்ளனர் எனவும் கூறப்பட்டு வருகிறது. தலைவர்கள் எல்லாரும் பாஜவுக்கு ஆதரவாக இருந்தாலும் தொண்டர்கள் பாஜவுடன் சேரக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரும் நெருக்கடி கொடுப்பதன் மூலம் தான் அவர் கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர கொண்டு வருவார். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அந்த இடத்தில் செங்கோட்டையனை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு எதிராக புதிய கோஷ்டி ஒன்றை கொண்டுவந்து பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிராக பேசாமலே புயலை கிளப்பியுள்ள செங்கோட்டையனுக்கு அவரது சொந்த ஊரில் எதிர்ப்பு குரலை கொண்டுவர முடிவு செய்துள்ளனர். இதற்காக எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் களம் இறங்கியுள்ளார். அவர் ரகசியமாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவரது பொறுப்புக்களை பறிக்க வேண்டும் எனவும் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள நிர்வாகிகளை வைத்தே பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம். முதற்கட்டமாக அந்தந்த மாவட்ட கட்சி கூட்டத்தை கூட்டி செங்கோட்டையனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து அடியோடு வெளியேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

The post கட்சியில் இருந்து நீக்க புதிய வியூகம்: செங்கோட்டையனுக்கு செக் வைக்க மைத்துனரை களமிறக்கிய எடப்பாடி; சொந்த ஊரில் எதிர்ப்பை கொண்டு வர நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: