?தேய்பிறை நாட்களில் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாமா?

– வி.மகேஷ்வரன், திருப்பராய்த்துறை.

தாராளமாகச் செய்யலாம். அப்படிச் செய்யலாம் என்பதற்காகத் தானே பஞ்சாங்கங்களில் தேய்பிறை முகூர்த்த தினங்களையும் கொடுத்திருக்கின்றார்கள். இரண்டாவதாக தேய்பிறையில் செய்யும் பொழுது, சப்தமி திதி வரை சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எந்த தோஷமும் இல்லை என்பார்கள். அதைவிட முக்கியம், அந்த குறிப்பிட்ட நாள், மணமக்கள் இருவருக்கும் பொருத்தமான நாட்களாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். இதற்கு தனியாக கணக்குகள் இருக்கின்றன. நல்ல ஜோதிடரிடம் காட்டி நல்ல முகூர்த்த லக்னத்தை நிர்ணயித்துக் கொள்வது சிறந்தது.

?இன்பம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். துன்பம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் இன்ப துன்பத்தை சமமாக கருத வேண்டும் என்கிறார்களே, அது முடியுமா?

– கோ.வரதராஜன், சென்னை.

பகவான் கீதையில் “சம துக்க சுக’’ என்கிறான். இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் சகஜம். இரண்டும் எப்பேர்பட்டவர்களுக்கும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறவர்கள், துன்பம் வந்தால் கலங்கி விடுவதில்லை. ஒரு உதாரணம் சொல்லுகின்றேன்.

டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர், ஆர்தர் ராபர்ட் ஆஷ். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இதய அறுவை சிகிச்சைக்காக இவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதில் கிருமிகள் இருந்ததால், எய்ட்ஸ் நோயாளி ஆனார். “எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தங்களுக்கா இந்த நிலை ஏற்பட்டது?” என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா…

500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடுகிறார்கள்.
50 லட்சம் பேர் ஆர்வமுடன் அதை கற்றுக் கொள்கிறார்கள்.
5 லட்சம் பேர் தொழில் முறைக்கு முன்னேறுகிறார்கள்.
50,000 பேர் சர்க்யூட் லெவலுக்கு முன்னேறுகிறார்கள்.

5000 பேர்தான் கிராண்ட் ஸ்லாம் லெவலுக்கு செல்கிறார்கள்.
50 பேர்தான் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
4 பேர்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறார்கள்.
2 பேர்தான் இறுதிப் போட்டியில் நுழைகிறார்கள்.

அதில் ஒருவரே வெற்றி பெறுகிறார். இப்படி பெயர், புகழ் பெற்ற போது `என்னை தேர்வு செய்தது ஏன்?’ என நான் கேட்டதில்லை. அதைப் போலத் தான் எய்ட்ஸ் நோயும். இன்பம், துன்பத்தைச் சமமாக கருதுவதால், ஆண்டவரிடம் இது பற்றி கேட்க மாட்டேன்’’ என்றார்.

?எந்தத் திருடர்களிடம் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்?

– கண்மணி செல்வன், தேனி.

எல்லாத் திருடர்களிடம் இருந்தும் நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பொருள்களைத் திருடுகின்ற புறத் திருடர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போலவே, நம்முடைய அறிவையும் ஆத்மாவையும் திருடக்கூடிய அகத்திருடர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். ஒரு அற்புதமான ஸ்லோகம் இருக்கிறது.
``காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”
இதற்குப் பொருள் என்ன தெரியுமா?

சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள், பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள், ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

?எது சிறந்த வாழ்வு?

– முகிலன், மார்த்தாண்டம்.

நிகழ்காலத்தில் அந்தந்த கணத்தில் வாழ்வதுதான் சிறந்த வாழ்வு. கடந்த காலத்தில் இதெல்லாம் செய்து இருக்கலாமே, விட்டுவிட்டோமே என்று கஷ்டப்படுவதும், எதிர்காலத்தில் என்னென்ன ஆகுமோ என்று கஷ்டப்படுவதுமாக பெரும்பாலோர் நிகழ்காலத்தையும் அமைத்துக்கொண்டு வாழ்வதால், மூன்று காலங்களிலும்கஷ்டப்படுகிறார்கள். நாளைக்கு வருவது வரட்டும் இன்றைக்கு வாழ்வோம் என்று நினைத்து வாழ வேண்டும். அதுதான் நல்லது. பாரத்தை இறைவனிடம் போடுங்கள். நிம்மதியாக இருங்கள்.

?மனித மனம் எப்படி இருக்க வேண்டும்?

– சுஹாசினி, திருச்சி.

குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். கவியரசு கண்ணதாசன்,
“மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” என்று ஒரு பாடலில்,

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்;
வாசல் தோறும் வேதனை இருக்கும்;
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்’’
– என்று பாடினார்.

பொதுவாகவே கவிஞர்கள் பிரச்னை களைச் சொல்வார்கள். தீர்வைச் சொல்ல மாட்டார்கள். வாலிக்கு வாழ்க்கை தந்த இந்தப் பாடலில் கண்ணதாசன் தீர்வையும் சொல்லியிருக்கிறார். ஒரு நண்பர் ஒரு செய்தியை அனுப்பி இருந்தார். நம் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை அந்தச் செய்தி எடுத்துரைக்கிறது. கூட்டமா இருக்கும் பஸ்ல ஒரு சீட்டாவது கிடைக்காதா என ஏங்கும் மனம். காலியாக இருக்கும் பஸ்ஸில் எந்தசீட்டில் உட்காரலாம் என குழம்பித் தவிக்கும். இதுதான் மனிதனின் மனம். யோசித்து பாருங்கள். எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கக் கூடாது என்பது புரியும்.

?திருவாழியாழ்வான் என்றால் யாரை குறிக்கும்?

– கோபாலகிருஷ்ணன், திருத்தணி.

சக்கரத்தாழ்வாரைத் தான் குறிக்கும். பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி, விரைந்து வந்து காப்பவர் சக்கரத்தாழ்வார். பெரும்பாலான திவ்யதேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் பெருமாள் காட்சியளிப்பார். ‘மகா விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை ‘திருவாழி ஆழ்வான்’ என்றும் ‘சக்கரத்தாழ்வான்’ என்றும் வைணவ சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் எட்டு (ஸ்ரீசுதர்சனர்), பதினாறு (ஸ்ரீசுதர்சன மூர்த்தி) மற்றும் முப்பத்திரண்டு (ஸ்ரீமகாசுதர்சன மூர்த்தி) கரங்களைக் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.

?பகவானுடைய வாத்சல்ய குணம் என்பது என்ன?

– ஸ்ரீகாந்த், மடிப்பாக்கம்.

பகவானுக்கு எத்தனையோ குணங்கள் உண்டு. அதில் அற்புதமான குணம் வாத் சல்யம். இதற்கு குற்றங்களை நற்றமாக கொள்ளும் குணம் என்பார்கள். வடமொழியில் தோஷ போக்கியத்துவம் என்பார்கள். தாய் பசுவானது கன்றின் அழுக்கை தன் வாயால் நக்கி அதை சுத்தப்படுத்தும். அதற்காக அது சந்தோஷப்படும். அப்படித்தான் இறைவன் தன் அடியார்களுடைய குற்றங்களைக்கூட நல்லதுதான் செய்தார் என்று மகிழ்வானாம். இதனை ஆழ்வாரும் “எம் அடியார் அது செய்யார் செய்தால் நன்றே செய்வர்’’ என்று பாடுகின்றார்.

பக்தர்களை கன்றாகவும் (வத்சல்) தன்னை தாய்ப் பசுவாகவும் கொண்டு கன்றின் அழுக்கை தாய்ப் பசு நீக்குவது போல இறைவனும் பக்தர்களின் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அருள்கிறான் என்பதால் அவனை பக்தவச்சலன் என்று அழைத்தார்கள். 108 திவ்ய தேசங்களிலே இரண்டு திவ்ய தேசங்களில் பக்தவச்சலப் பெருமாள் அருள்கிறார். ஒன்று திருநின்றவூர். இரண்டு திருக்கண்ணமங்கை.

?உறவினர்கள் இறந்துவிட்டால், அந்த வருடத்தில் பண்டிகைகளை கொண்டாடலாமா?

– பாலாஜி, நங்கநல்லூர்.

தர்ம சாஸ்திரப்படி, ஒரு கர்மாவைச் செய்வதற்கு கர்த்தா (அக்கர்மாவைச் செய்கின்றவர்), காலம் (அக்கர்மாவை செய்ய விதிக்கப்பட்ட காலம்) இடம் (அக்கர்மாவைச் செய்யக்கூடிய இடம்) இவை மூன்றும் தோஷமற்றதாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம். ஒரு வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு (அந்த இறந்தவருக்கு) கர்மா செய்யக்கூடிய பிள்ளை (அ) கர்மாவைச் செய்யக்கூடிய உறவினர் யாரோ அவர்கள் அந்த ஒரு வருடம் நித்ய கர்மாவைத் தவிர, மற்ற கர்மாக்களைச் செய்வதற்கு சுத்தி (sudthi) போதாது என்று கூறுகிறது.

அதுமட்டுமல்ல, அக்கர்மாவைச் செய்பவன், எங்கு வசிக்கின்றானோ அந்த இடத்திற்கும் போவதால், சுத்திபோதாது என்கிறது. இதன் அடிப்படையில், முற்காலத்தில் பந்துக்கள் (உறவினர்கள்) அனைவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். ஆகையால் பந்துக்கள் அனைவரும் ஒருவருடம் பண்டிகைகளைக் கொண்டாடமாட்டார்கள்.

இக்காலத்தில் அப்படியல்லாமல், உறவினர்கள் அனைவரும் தனித் தனியாக இருக்கின்றார்கள். இப்படி இருக்க, மேலே கூறிய சாஸ்திரப்படி கர்த்தாவைத் தவிர (கர்மா செய்யக்கூடிய) மற்றவர்களுக்கு எப்படி அசுத்தி வரும்? மற்றவர்கள் வீட்டிற்கு எப்படி அசுத்தி வரும்? ஆகவே, இறந்தவரின் கர்மாவைச் செய்யக் கூடிய பிள்ளைகளுக்கும் (அ) அந்த இறந்தவரின் கர்மாவை தொடர்ந்து செய்யக் கூடியவர்களுக்கும் மட்டுமே இந்த அசுத்தி பொருந்தும்.

மற்ற தாயாதிகள் மற்றும் உறவினர்கள், இறந்தவரின் சபிண்டீகரணம் என்று சொல்லக் கூடிய பன்னிரெண்டாம் நாள் கர்மா முடிந்தவுடன் அவரவர்கள் வீட்டில் எல்லா பூஜைகளையும், பண்டிகைகளையும் செய்யலாம். தர்ம சாஸ்திரம் சைவம், வைணவம், எல்லோருக்கும் ஒன்றுதான். ரிஷிவாக்கியங்களான ஸ்ம்ருதியை கடைப்பிடிப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

தேஜஸ்வி

The post ?தேய்பிறை நாட்களில் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாமா? appeared first on Dinakaran.

Related Stories: