ஏன் பள்ளி கொண்டீர் ஐயா! – ஸ்ரீரங்கநாதா
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா!
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே
நன்மை உண்டொருக்காலே.
இந்தப் பாடல்கள் கர்நாடக சங்கீத உலகில் மிகவும் பிரபலமானவை. இப்பாடல்களை எழுதியவர் அருணாசலக் கவிராயர். இவர் பாடல்கள் இவர் காலத்திலேயே, இவரை வாழ வைத்ததுடன் இன்னும் பலரையும் வாழ வைத்தன. இன்றும் பலரையும் வாழ வைக்கின்றன.தமிழ் இசை மூவர் எனுப்படும் மூவரில் ‘அருணாசலக் கவிராயர்’ பாடல்களே அதிகமாக,சங்கீத மேடைகளில் முழங்கப் படுகின்றன. இவரை ‘சீகாழி அருணாசலக் கவிராயர்’ எனக் கூறினாலும், இவர் பிறந்தது சீர்காழியில் அல்ல.
தமிழ் இசை வளர்த்த இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!
சீர்காழிக்கு அருகில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில், நல்லதம்பிப் பிள்ளை – வள்ளியம்மை எனும் தம்பதியர் மிகுந்த அன்போடும் ஒத்த கருத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் செய்த பூர்வ புண்ணியத்தாலும், இசையார்வம் கொண்ட அடியார்களின் புண்ணியத்தாலும், அவர்களுக்கு 1711- ம் ஆண்டு, நான்காவது பிள்ளையாகப் பிறந்தார் அருணாசலக் கவிராயர். (இனி இவரைக் ‘கவிராயர்’ எனும் பொதுப்பெயரிலே பார்க்கலாம்.)
ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட கவிராயர், பன்னிரண்டு வயதிற்குள் நன்றாகவே கல்வியில் தேர்ச்சி பெற்றார். ஆனால், அக்குழந்தை பேரும் புகழும் பெற்று விளங்குவதைக் காணும் பாக்கியம், பெற்றோர்களுக்கு இல்லை. தாயார் முன்னும் தந்தை பின்னுமாக, இறைவன் திருவடிகளை அடைந்தார்கள். கவிராயரைப் பாதுகாக்கும் பொறுப்பு, அவரது மூத்த சகோதரர்கள் மூவரையும் சார்ந்ததாக ஆனது. ஆனால், கவிராயர், தன் சகோதரர்கள் பாதுகாப்பில் இல்லை. கவிராயரைத் தருமபுரத்திற்கு அனுப்பியது விதி.
தருமபுரம் சென்ற கவிராயர், அங்குள்ள சைவ மடம் ஒன்றில் சேர்ந்து, அங்கிருந்த தம்பிரான்களிடம் தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் கற்று வந்தார். பதினெட்டு வயதிற்குள் கவிராயர், அவ்விரண்டு மொழிகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்றார். அதன்பின் கவிராயர், வடமொழியிலும் தென் மொழியிலும் உள்ள ஆகம இதிகாச புராணங்கள் பலவற்றையும் கற்று உணர்ந்தார். கூடவே, மடத்தில் இருந்த அம்பலவாணக் கவிராயர் என்பவரிடம் தமிழ் இலக்கண – இலக்கியங்களையும் கற்று, பெரும் பாண்டித்தியம் பெற்றார்.
நுண்ணறிவும் நல்லொழுக்கமும் அமைதியான தோற்றமும் கொண்ட கவிராயரைக் கண்டு, அம்பலவாணக் கவிராயர் உள்ளம் பூரித்தது; அதை வார்த்தைகளாகவே வெளியிட்டார்; ‘‘அருணாசலம்! நீர் இந்த ஆதீனத்தின் தலைமை பொறுப்பை ஏற்கச் சம்மதிக்கிறீரா?’’ எனக் கேட்டார்.கவிராயர் மென்மையாக மறுத்தார். அதில் தெளிவு இருந்தது.
‘‘சுவாமி! தாங்கள் அடியேனை ஒருபொருட்டாக மதித்து, இவ்வாறு பேசும்போது, அடியேனால் உங்கள் வார்த்தையை ஏற்க முடியவில்லை. தயவுசெய்து மன்னியுங்கள்! தசரத சக்கரவர்த்தி இல்லறத்தில் இருந்து, பிறகே துறவறத்தில் ஆசை கொண்டார். சகல ஞானமும் உணர்ந்த ஸ்ரீ ராமரும் இல்லறவாசியாக இருந்ததாகவே கூறப்பட்டிருக்கிறது.‘‘தமிழ் வேதமாகிய திருக்குறளைத் தந்த திருவள்ளுவரும் இல்லறவாசி தான். ஆகையால், அடியேனும் அவ்வழியிலேயே செல்ல விரும்புகிறேன்’’ என்றார்.கவிராயருக்குத் துறவறம் அளிக்க விரும்பியவர், தன் எண்ணம் பலி்க்காதது கண்டு, ‘‘சரி! உம் விருப்பப்படியே செய்வீராக!’’ என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.
இவ்வாறு இல்லறத்தின் மேன்மையைப் பேசிய கவிராயர், உடனே திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் சில காலம், தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்து, புகழ் பெற்ற தமிழ்ப் புலவராக ஆனார். அதன்பின், முப்பதாவது வயதில் கருப்பூரில் இருந்த, தம் குலத்தைச்சேர்ந்த ஓர் உத்தமியை மணந்தார். இல்லறம் நடத்தப் பொருள் வேண்டுமே! அதற்காகக் காசுக்கடைத் தொழிலை மேற்கொண்டார் கவிராயர்.அதே சமயம், பொழுதை வீணாகக் கழிக்கவில்லை, கவிராயர்.தமக்கு முன்னால் இருந்த புலவர்கள் இயற்றிய நூல்களை எல்லாம், மிகுந்த ஆர்வத்தோடு ஆராய்ந்து வந்தார். அதன் பலன்? திருக்குறளும் கம்ப ராமாயணமும் கவிராயரின் உள்ளத்தில் அழுத்தமான இடத்தைப் பிடித்தன.
ஏற்கனவே, ஆதீனப் பொறுப்பை ஏற்க மறுத்து, ராமாயணத்தில் இருந்து விளக்கம் சொன்னவரல்லவா? ராமாயணத்தில் மனம் ஆழமாகப் பதிய; ஆர்வம் உள்ளவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தும், அனைவரும் மகிழும்படி ராமாயண சொற்பொழிவும் செய்து வந்தார்.ஒருநாள், தம் வியாபாரத்திற்குப் பொருள் கொள்முதல் செய்வதற்காகப் புதுச்சேரிக்குப் புறப்பட்டார் கவிராயர். வழியில் சீர்காழியில் ஒரு திருமடத்தில் தங்கினார். அத்திருமடம் தருமபுர மடத்தைச் சேர்ந்தது. அப்போது அத்திருமடத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர், சிதம்பரம் பிள்ளை என்பவர். அவர், தருமபுரத் திருமடத்தில் கவிராயரோடு ஒன்றாகக் கல்வி கற்றவர். அவர் தான் துறவு பூண்டு, சீகாழி திருமடத்திற்குக் கட்டளை தம்பிரானாக வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரும் கவிராயரும் சந்தித்ததும், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
அப்போது, கட்டளைத் தம்பிரான், ‘‘சீர்காழித் தலத்திற்குப் ‘பள்ளு’நூல் ஒன்று பாட முயன்றேன். ஆனால் வேலைப்பளுவின் காரணமாக, அதைச்செய்ய முடிய வில்லை. எப்படியாவது அதைச் செய்து முடித்து விடும்’’ என்று கவிராயரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அதை ஏற்ற கவிராயர், அன்றைய ஓர் இரவிலேயே, நூலை எழுதி முடித்து, மறுநாள் அதிகாலையில், கட்டளைத் தம்பிரானின் அடியார்களில் ஒருவரிடம் நூலை ஒப்படைத்து, ‘‘யான் அவசரமாகப் புதுவை செல்ல வேண்டியிருப்பதால், நீங்களே இந்நூலை தம்பிரான் அவர்களிடம் சேர்த்து விடுங்கள்! திரும்புகையில் இங்கே வந்து தங்குவேன் என்பதையும் தெரிவியுங்கள்!’’ என்று கூறிவிட்டுப் புதுச்சேரிக்குச் சென்று விட்டார்.
தம் நண்பரான கவிராயரால் ஓர் இரவிலேயே எழுதப்பட்ட, அந்தப் ‘பள்ளு’ நூலைக்கண்ட கட்டளைத் தம்பிரான், கவிராயர் புதுச்சேரி சென்று விட்டார் என்ற தகவலைக் கேட்டு, மிகவும் ஆச்சரியப்பட்டார்.‘‘ஆகா! ஆகா! என்ன திறமை! என்ன திறமை! கல்விமானான இக்கவிராயரை, சீகாழியிலேயே குடியிருக்கும்படியாகச் செய்ய வேண்டும்’’ என்று தீர்மானித்தார்.நல்லவர்கள் தீர்மானமல்லவா? உடனே செயல்பாட்டிற்கு வந்து விட்டது.
நண்பருக்கென்று ஒரு தனி வீட்டைத் தயார் செய்தார் தம்பிரான். தில்லையாடிக்கு ஓர் ஆளை அனுப்பி, அருணாசலக் கவிராயரே அழைத்ததாகச் சொல்லி, கவிராயரின் குடும்பத்தை சீகாழிக்கு வரவழைத்தார்; தயார் செய்த வீட்டில் கவிராயரின் குடும்பத்தைக் கிரகப்பிரவேசம் செய்வித்தார்.புதுச்சேரிக்குப்போய் இருந்த கவிராயர், அங்கே வேலையை முடித்துக்கொண்டு, ஒரு சில நாட்களிலேயே திரும்பினார். ஏற்கனவே திருமடத்து அடியாரிடம் வாக்களித்து இருந்ததற்கு ஏற்ப, சீர்காழிக்கு வந்து, திருமடத்தில் தங்கினார்.
அப்போது அவரைக்கண்ட தம்பிரான், ‘‘என்ன இருந்தாலும், ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், புதுச்சேரிக்குப் புறப்பட்டது என்ன நியாயமோ?’’ என்று, சற்று சலித்ததைப் போலப் பேசினார்.அதன்பின், ‘‘சரி! சரி! நடந்தது நடந்து விட்டது. வாரும்! அப்படியே சற்று காலாற உலாவிவிட்டு வரலாம்’’ என்றார்.கவிராயரும் ஒப்புக்கொள்ள இருவருமாகப் புறப்பட்டார்கள்.
அப்படியே போய்க் கொண்டிருந்த தம்பிரான், ஏற்கனவே கவிராயரின் குடும்பத்தைக் குடிவைத்திருக்கும் புது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே உள்ளே நுழைந்ததும், கவிராயரின் மனைவி, அவர்களை வரவேற்றார்.கவிராயருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை; ‘‘தில்லையாடியில் இருந்தவள், இங்கே சீகாழியில் எப்படி?’’ என்று அவர் மனம் நினைத்ததை, முகம் வெளிப்படுத்தியது.அவர் மனைவி முன்வந்து, நடந்ததையெல்லாம் விவரித்தார்.
தம்பிரான் தொடர்ந்தார்; ‘‘இனிமேல் என்றும், இங்கே சீகாழியிலேயே நீர் தங்க வேண்டுமென்று தான், இந்த ஏற்பாடுகளைச் செய்தேன். ஆகையால் குடும்பத்தோடு, சீகாழியிலேயே இருக்க வேண்டும் நீர்!’’ என்றார்.சீகாழியில் இவ்வாறு கவிராயர் தங்கியிருந்த காலத்தில் தான்; அசோமுகி நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்கள் அவரால் எழுதப்பட்டன. அந்தக் காலத்தில், சீகாழி்க்கு அருகில் உள்ள சட்டநாதபுரம் எனும் ஊரில் வெங்கடராமையர், கோதண்டராமையர் எனும் இரு வேதியர்கள், சங்கீத சாஸ்திரத்தில் மிகவும் திறமைசாலிகளாக இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் கவிராயரை நெருங்கி சில நூல்களைப் பாடம் கேட்டார்கள். பிறகு கம்ப ராமாயணம் பாடம் கேட்டார்கள். பாடம் கேட்டுக் கொண்டிருந்த இருவரும் ஒருநாள், ‘‘குருநாதா! கவிஞர் பெருமானே! தாங்கள் இதுவரை எழுதியுள்ள புராணம் முதலான நூல்கள், மக்கள். மத்தியில் பரவவில்லை. ஆகையால் தங்கள் பேரும்புகழும் பரவும்படியாக, இதிஹாசங்கள் இரண்டில் ஒன்றைத் தாங்கள் ஒரு பிரபந்தமாகச் செய்தால் நல்லது’’ என வேண்டினார்கள்.
கவிராயரும் ஒப்புக்கொண்டு, ராமாயணத்தைக் கீர்த்தனைகளாகப் பாடத் தொடங்கினார். முதன்முதலில் அவர் பாடியது- யுத்த காண்டம். அதில் ‘அடடா! வெளியே புறப் படடா’ எனும் கீர்த்தனை வரை பாடி, வேண்டுகோள் விடுத்த அந்தண சீடர்கள் இருவரிடமும் ஒப்படைத்தார்.‘அடடா! வெளியே புறப்படடா!’ எனும் அந்தக் கீர்த்தனையைத் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் பாடவேண்டும்; நாம் கேட்க வேண்டும். கம்பீரமான குரலில் தாளக்கட்டுகளோடு வாரியார் சுவாமிகள் பாடும்போது, அருணாசலக் கவிராயர் மட்டுமல்ல; ராவணன் சபையில் அங்கதன் பாடுவதாக அமைந்த அப்பாடல், ராவணன் சபையையும் அங்கதனையும், அப்படியே கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்.வாருங்கள்! வாரியார் சுவாமிகளிடம் இருந்து கவிராயரிடம் போகலாம்.
கவிராயரிடம் இருந்து கீர்த்தனைகளைப் பெற்றுக் கொண்ட சங்கீத நிபுணர்கள் இருவரும், சென்னைக்குச் சென்று அப் பாடல்களை ராக-தாளங்களுடன் பாடிப் பரிசில்களையும் ஏராளமாகப் பெற்றார்கள். (அவ்வாறு பரிசுகள் கொடுத்தவர் கவிராயரிடமே தெரிவித்து மகிழும் நிகழ்ச்சி பின்னால் வரும்.)கவிராயரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவின. வேதிய சீடர்களோ, ‘‘சுவாமி! யுத்த காண்டத்திலும் ஒரு பகுதி வரை தான், தாங்கள் பாடியிருக்கிறீர்கள். மேற்கொண்டு, ராமாயணம் முழுதுமாகக் கீர்த்தனைகளாகப் பாடித்தர வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்கள் வார்த்தைகளால் ஊக்கம் பெற்ற கவிராயர், அப்படியே கீர்த்தனைகளாகப் பாடினார். அந்த நூல்தான், ‘இராம நாடகக் கீர்த்தனை’ எனும் பெயரில், தமிழுக்கும் இசை உலகுக்கும் அழியாத பொக்கிஷமாக நின்று, இன்று வரை உலவுகின்றது.நூலை முடித்த கவிராயர், அதை அரங்கேற்ற விரும்பினார். கம்பர் தன் ராமாயணத்தை அரங்கேற்றிய ஸ்ரீரங்கத்திலேயே, தம் ‘இராம நாடகக் கீர்த்தனை’ நூலும் அரங்கேற்றப்பட வேண்டும் என்பது, கவிராயரின் தணியாத தாகமாக இருந்தது. ஸ்ரீரங்கம் சென்றார்.
ஆனால் அங்கிருந்த பொறுப்பாளர்களோ, ‘‘ஐயா! கவிராயரே! கம்பர் இங்கு ராமாயணத்தை அரங்கேற்றிய போது, பகவான் பல லீலைகளும் அருளாடல்களும் செய்து, அதை அரங்கேற்றத் திருவருள் புரிந்தார். தங்கள் வகையிலும் அவ்வாறு ஏதேனும் நடந்தால்தான், பெருமாள் எங்களுக்கு ஒப்புதல் தந்தால்தான், உங்கள் நூலை இங்கு அரங்கேற்றம் செய்ய ஒப்புவோம்’’ என்றார்கள்.கவிராயர் தனியாக ஓரிடத்தில் அமர்ந்தார்; மனதாற ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்தித்துத் துதித்தார். அப்போது அவர் பாடிய பாடல்தான், ‘ஏன் பள்ளி கொண்டீர் அய்யா!’ எனும் பிரபலமான பாடல்; இப்பாடல் மோகன ராகத்தில் அமைந்தது.
கவிராயர் கேட்டு விட்டார். அதற்கு அரங்கநாதர் பதில் சொல்ல வேண்டாமா? சொன்னார். அன்று இரவே கவிராயரின் கனவில், திருமண் தரித்த பெருமாள் அடியார் போலக் காட்சியளித்து, ‘‘கவிராயா! இதற்குமுன் கம்பர் இங்கே ராமாயணத்தை அரங்கேற்ற வரும்போது, நம் சடகோபனைப் பாடினையோ? என்று பெருமாள், அவரிடம் கேட்டார். பிறகு கம்பர், நம்மாழ்வார் மீது ஓர் அந்தாதி பாடினார். பிறகே கம்பருடைய நூல் அரங்கேறியது.
‘‘அதுபோல, நீரும் உமது நூலில் நமது பரிசனங்களைப் பாடும். உமது நூலும் எந்த இடையூறும் இல்லாமல் அரங்கேறும்’’ என்று சொல்லி மறைந்தார்.அரங்கநாதர் அத்துடன் விடவில்லை. அடியார்கள் கனவிலும் அதே வடிவுடன்போய்க் காட்சி தந்து, ‘‘கவிராயரால் நம் பரிசனங்களைப் பாடுவித்துக் கொண்டு, அவர் எழுதியுள்ள ராமநாடகக் கீர்த்தனையை அரங்கேற்றச் செய்யுங்கள்!’’ என்று அருளி மறைந்தார்.
அப்புறம் என்ன? மறுநாள் பொழுது விடிந்தது. கவிராயரும் அடியார்களும் சந்தித்து, அரங்கன் கனவில் வந்து அருளியதை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டார்கள்.அப்புறம் என்ன? அரங்கன் சொன்னபடியே அனந்த கருட விஷ்வக்சேனர், திருவனந்தாழ்வான், பஞ்சாயுதங்கள், ஆழ்வார், ஆசாரியர்கள் முதலான அனைவரையும் பாடினார். அதன்பின், கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனை, அங்கே திருவரங்கத்தில் அரங்கேற்றமானது.கம்பராமாயணம் அரங்கேறிய அதே ஆயிரங்கால் மண்டபத்தில், பங்குனி அஸ்தம் அன்று, அளவிலாத அடியார்கள் முன்னிலையில் நடந்த அரங்கேற்றத்தில், கவிராயர் வெகுவாகக் கௌரவிக்கப்பட்டார்.
சில நாட்கள் கழிந்தன. கவிராயர் தஞ்சைக்குச் சென்றார். அங்கே தஞ்சை சமஸ்தான அதிபதியாக இருந்த துளசி மகாராஜா சபையில், தம் ராமநாடகக் கீர்த்தனைகளை அரங்கேற்றவே கவிராயர் சென்றார்.ஆனால், அப்போது தஞ்சையின் நிலை சரியில்லை. சென்னை நவாப்பாக இருந்த மதார்மல்க் எனும் தானிஷாவால், தஞ்சை முற்றுகையிடப் பட்டிருந்தது. ஆகையால், கவிராயர் நினைத்தபடி தஞ்சையில் அரங்கேற்றம் செய்ய முடியவில்லை.
அடுத்த முயற்சியில் இறங்கினார் கவிராயர். புதுச்சேரியில் பிரபலமான பிரபுவாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் முன்னிலையில், ராமநாடகக் கீர்த்தனையை அரங்கேற்றலாம் என்ற எண்ணத்தில், புதுச்சேரிக்குச் சென்றார், கவிராயர்.அங்கும் அரங்கேற்றத்திற்கான சூழ்நிலை சரியாக அமையவில்லை. காரணம்? ஆனந்தரங்கம் பிள்ளையும் துளசி மகா ராஜாவும் நெருங்கிய நண்பர்கள்; ‘‘நண்பர் கேட்பதற்கு முன், நான் கேட்பது நன்றாக இருக்காது. இருந்தாலும் உங்களை வெறுங்கையாக அனுப்ப எனக்குமனம் இல்லை’’ என்ற ஆனந்த ரங்கம் பிள்ளை, கவிராயருக்குப் பலவிதமான வெகுமதிகளை அளித்தார்.
– பி.என். பரசுராமன்
