புரிந்து கொள்வதும் அறிந்து கொள்வதும்

உலகத்தில் நூற்றுக்கணக்கான நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாள் செய்தித்தாளைப் பிரித்துப் படித்தாலும் நாடுகளுக்குள் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்துக் காண்கின்றோம்.ஏதாவது ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் அதிலே இருக்கக்கூடிய பல்வேறு மாகாணங்கள் அல்லது பகுதிகளுக்குள் பிரச்னை இருப்பதைப் பார்க்கலாம். சரி, ஒரு நாட்டுக்குள் வெவ்வேறு பகுதிகளுக்குள் பிரச்னை என்று நினைத்தால் அந்தப் பகுதிக்குள் இருக்கக்கூடிய பல்வேறு விதமான மக்கள் அல்லது ஊர்கள் இடையே சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஊருக்குள்தான் பிரச்சனை என்று சொன்னால் அந்த ஊரில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பகுதிகளுக்கும் கூட பிரச்னைகள் இருக்கவே செய்யும்.சரி, இன்னும் சுருக்கி ஒரு தெருவுக்குள் வந்து விட்டால் அந்த தெருவுக்குள் வாழுகின்ற நபர்களுக்கும் பிரச்னை இல்லாமல் இருக்குமா? இருக்காது.சரி இன்னும் சற்று சுருக்கி ஒரு வீட்டுக்குள் வந்து நிற்போம். அந்த வீட்டுக்குள் இருக்கக்கூடிய நபர்களுக்குள் பிரச்னை இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒரு வீட்டுக்குள் இருக்கும் மிகச்சிறிய அலகான (unit) கணவன் – மனைவி, குழந்தைகள் என இவர்களுக்குள் பிரச்னை இருக்குமா?

பிரச்னை இல்லாமல் இருக்காது என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். பிரச்னைகளும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை ஏது?“வீட்டுக்கு வீடு வாசப்படி” என்பார்கள். எப்படி வீட்டுக்கு வீடு வாசல்படி இருக்கிறதோ, அப்படியே வீட்டுக்கு வீடு பிரச்னைகளும் இருக்கவே செய்யும்.சரி, இந்த பிரச்னைகளுக்கெல்லாம் என்ன காரணம்? காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் கூட, மையப் புள்ளி ஒரு இடத்தில் வந்து நிற்கும். அதுதான் புரிதல் இன்மை. (misunderstanding)இரண்டு நாடுகளுக்குள் பிரச்னையாக இருந்தாலும் சரி, இரண்டு வீடுகளுக்குள் பிரச்னையாக இருந்தாலும் சரி, ஒரு வீட்டில் இருக்கக்கூடிய இரண்டு நபர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்னையாக இருந்தாலும், புரிந்து கொள்ளாததால் வருவதுதான்.40 வருடங்கள் ஒன்றாகவே வாழ்ந்த கணவன் மனைவிகளுக்குள் பாருங்கள்.ஊருக்குள் நல்லவர்களாக வாழ்ந்தோம் (நடித்தோம்). ஆனால், என்னை என்னுடைய கணவர் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை.

கணவரிடம் கேட்டால் என்னுடைய மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை என்பார்.காரணம் புரிதல் என்பது சாதாரணமான விஷயமே அல்ல. இங்கே பலரும் பல விஷயங்களை அறிந்து கொள்ளு கின்றார்கள். ஆனால், புரிந்து கொள்கிறார்களா என்பதுதான் கேள்வி. அறிந்து கொள்வது என்பது (knowing) வேறு; புரிந்து கொள்வது (understanding) என்பது வேறு.ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன். ரொம்ப காலம் முன்னால் படித்த செய்தி.ஒரு மருத்துவர். கைராசிக்காரர். பார்த்த உடனே சில கேள்விகளைக் கேட்டு அவர் சொல்லுகின்ற அடையாளங்களை வைத்துக் கொண்டு நூறுக்கு 90 சதவீத இந்த நோய் என்பதைக் கண்டு பிடித்து விடக்கூடிய ஆற்றல் இருந்தது. அத்தனை அனுபவம்; அத்தனை படிப்பு; அத்தனை செயல்முறை; அத்தனை வருமானம்; அத்தனை நல்ல பெயர்;.ஆனாலும், ஒருநாள் காலையில் அவர் ஏதோ ஒரு பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டார்.விசாரித்துப் பார்த்தபொழுது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் முதல்நாள் ஏற்பட்ட ஒரு சின்ன தகராறு அவருடைய மனதை நிலை குலையச் செய்து, ஒரு நொடியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் துரதிஷ்டமான நிலைக்குத் தள்ளியது.

இங்கே மருத்துவ விஷயத்தைப் பற்றிய அறிதல் அவருக்கு இருந்தது; ஆனால், அவரோடு வாழும் மனைவியைப் பற்றிய புரிதல் இல்லை.ஒரு விஷயத்தை நிறையத் தெரிந்து கொள்வதினாலேயே புரிதல் வந்து விடும் என்று நினைத்துக் கொண்டு விடக்கூடாது. அறிதல் என்பது அறிவோடு, மூளையோடு சம்பந்தப்பட்டது. புரிதல் என்பது உணர்வோடு மனதோடு சம்பந்தப்பட்டது.இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழமான ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரபஞ்சத்தை விட பிரம்மாண்டமான மனதைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை.பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போவது கிடையாது. ஆனால், மனதைப் பற்றிய புரிதல் அவருடைய வாழ்க்கையை அற்புதமாகக் கையாளும் வழிவகை களைத் தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் மேல்நாட்டு சிந்தனையும் நம்முடைய நாட்டு சிந்தனையும் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கின்றன.“உன்னையே நீ அறிவாய் (“Know thyself”)என்பது உலகப் புகழ் பெற்ற சாக்ரடீஸ் வார்த்தை. நான் யார் ? – ரமண மகரிஷியின் அற்புதமான வார்த்தை.முன்னிலை வாக்கியமாகச் சொல்லப்பட்ட“உன்னையே நீ அறிவாய்” வார்த்தையை விட ரமண மகரிஷியின் தன்மை வாக்கியமாகிய நான் யார் என்கிற வார்த்தை அதி அற்புதமானது.காரணம் இந்தக் கேள்விதான் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்பட வேண்டும்.“நான் யார்?” என்கின்ற கேள்விக்கான விடையை மட்டும் ஒருவன் கண்டுபிடித்து விட்டால், அவன் எந்த புராணங்களையும் சுலோகங்களையும் படிக்க வேண்டிய அவசியமே கிடையாது. காரணம் தன்னை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவன், இந்த உலகத்தையும், உலகத்தை படைத்த இறைவனையும் புரிந்து கொண்டவனாக ஆகிறான்.நாம் ஆன்மிகத்தையும் வாழ்வியலையும் தனித்தனியாகப் பார்க்கிறோம் அதனால் வருகின்ற சிக்கல்கள்தான் அனைத்தும்.சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கூட சாயங்காலம் கோயிலுக்குப் போய் ஒரு கும்பிடு போட்டு வைத்தால் எல்லாம் தீர்ந்து விடும் என்று நினைக்கிறோம்.

ஆனால், அப்படி அல்ல.திருவாய்மொழி குறித்த தனியனில் ஒரு பாசுரம். முழுப் பாசுரம் கூட வேண்டியதில்லை.முதல் வரி. “மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்…”உயிர்நிலை என்பது நம்மை நாமே புரிந்து கொள்வது. நம்மைப் புரிந்து கொண்டால் நம்மில் இருக்கக்கூடிய இறைநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.நாம் புராண இதிகாசங்களைக் கரைத்துக் குடித்திருக்கலாம். வேத மந்திரங்களை அற்புதமாகச் சொல்லலாம். பல்வேறு நூல்களை மேற்கோள் காட்டி மழையாகப் பொழியலாம். சொல்லும் போதும் கேட்கும் போதும் ஒரு சிலிர்ப்பு ஏற்படலாம்.கேட்டு முடிந்தவுடன், சொன்னவரும் கேட்டவரும் மறுபடி கீழே இறங்கி அந்த உணர்வுக்கு நேர் விரோதமான நிலையில் தான் வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது.

சொன்னவருக்கும் கேட்டவருக்கும் முன்னால் என்னென்ன பிரச்னைகள் கவலைகள் இருந்ததோ, அத்தனையும் கேட்டு முடித்த பின்னும் நீடிக்கிறது.புராணங்கள் இதிகாசங்கள் எல்லாமே இறைவனைப் பற்றிய அறிதலைத் தருகின்றன. காரணம் அங்கே அறிவோடு இணைந்த மூளைதான் வேலை செய்து கொண்டிருக்கிறது.ஆனால், இதயம் வேலை செய்ய வேண்டும். மனம் வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்கின்ற பொழுதுதான் இறைவனைப் பற்றிய புரிதல் ஏற்படும். இறைவனைப் பற்றிய புரிதல் ஏற்படாதவரை இறைவனே நேரில் வந்தாலும் கூட, அறிந்தவற்றை வைத்துக்கொண்டு அளவிடுவீர்களே தவிர, அவரைப் புரிந்து கொள்ள முடியாது.புரிந்து கொண்டவனுக்கு வார்த்தைகள் தேவையில்லை. அதனால்தான் அருணகிரிநாதர் நிறைவாக அனுபூதி பாடுகின்ற பொழுது “சும்மா இரு; சொல்லற” என்று இரண்டு வார்த்தைகளை வைத்தார்.வாழ்க்கைக்கும் அந்த வார்த்தைத்தான்.ஆன்மிகத்துக்கும் அதுதான்.

Related Stories: