சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்(திமுக) பேசுகையில், ‘‘உத்திரமேரூர் தொகுதி வெண்குடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு முன்வருமா? வாலாஜாபாத் பேட்டை வளரும் பகுதியாக உள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கு அந்த பகுதியில் குடிநீர் ஆதாரமாக பாலாறு உள்ளது,’’ என்றார்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘அணை கட்ட சொல்லும் இடம் அருகே இரு அணைகள் உள்ளன.
வெண்குடியில் தடுப்பணை கட்ட வேண்டியது அவசியம்தான். அங்கு ரூ.70 கோடியில் 1600 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளது. தடுப்பணையை அங்கு கட்டினால், 12 கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். 2400 ஏக்கர் விவசாய நிலம் பலனடையும். எனவே நிதி நிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
க.சுந்தர்: விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டதில் ஏரிகளை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, செங்கல்பட்டு அருகில் 1000க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. அதனை பராமரிக்க வேண்டும். அமைச்சர் துரைமுருகன்: வேண்டும் என்றால் தடுப்பணை கட்ட நான் சொன்ன ரூ.70 கோடி நிதியை ஏரிகள் பராமரிப்புக்கு எடுத்து கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post பாலாற்றின் குறுக்கே தடுப்பணை முன்னுரிமை அடிப்படையில் கட்டப்படும்: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.