மக்கள் நலத்திட்டத்திற்காக வாங்கப்படும் கடன் செலவினம் கிடையாது; சமூக முதலீட்டிற்கானது: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பின்வருமாறு:
கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி): 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என அறிவித்துவிட்டு, இந்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்க போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் இதுவரை ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள். வரிவிதிக்கும் இனங்களில் கூடுதல் வரி, கூடுதல் கட்டணம் உயர்த்தியுள்ளீர்கள். ஆனால், எந்தவித புதிய திட்டங்களும் இல்லை?

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு : தமிழகத்தின் வளர்ச்சி என்பது 14 சதவீதம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு ஒரே காரணம் முதல்வரின் முயற்சிகள்தான். தமிழகத்தின் பொருளாதாரம் என்பது இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. கடன் வாங்குகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். கடன் வாங்குவது என்பது உற்பத்தி அளவு கொண்டு விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய அரசும் ரூ.181.74 லட்சம் கோடி கடன் வாங்குகிறது. அமெரிக்கா ரூ.3,149 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறது.

தமிழகத்தின் கடன் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் கோடி. அமெரிக்கா பொருளாதாரம் நம்மை விட 350 சதவீதம் மோசமானது. எனவே, கடன்களை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சி காலத்திலும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கடன் வளர்ச்சி வீதம் 108 சதவீதமாக இருந்தது. உங்களது ஆட்சியில் (எடப்பாடி பழனிசாமி) ரூ.4.80 லட்சம் கோடியில் கடன் வாங்குனீர்கள், இது 128 சதவீதமாகும். உங்களுடைய கடனும் சேர்த்துதான் தற்போது ரூ.9 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால், எங்களின் ஆட்சியில் வெறும் 93 சதவீதம் கடன் சதவீதம் வைத்துள்ளோம். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நீங்கள் ஆட்சி வருவதற்கு முன்பு நிதியை சரி செய்ய நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த குழு இதுவரை என்ன அறிக்கையை அளித்துள்ளது. அவ்வாறு அறிக்கை கொடுத்திருந்தால் அதன்படி செயல்படுகிறீர்களா? நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வருமானம் அதிகரித்தாலும், கடனும் சேர்ந்து அதிகரிக்கிறது. ஆனால், திட்டங்கள் எதுவும் இல்லையே? (இந்த விவாதத்தின் போது தன்னை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.)

ஓ.பன்னீர்செல்வம்: கடன் எதற்காக வாங்கப்படுகிறது. கடன் வாங்கப்படுவது என்பது மூலதன செலவு செய்வதற்காக. அதுதான் நியதி அதனை நீங்கள் கடைப்பிடித்தீர்களா என விளக்கமாக கூறுங்கள்.

தங்கம் தென்னரசு: அன்றைக்கு நீங்கள் ஒன்றிய அரசுடன் சமரசமாக இருந்த காரணத்தால் அங்கிருந்து நிதி வந்தது. ஆனால், எங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற போராட வேண்டியுள்ளது. வாங்கும் பணத்தை எப்படி செலவும் செய்கிறோம் என்பது தான் முக்கியம். கல்விக்கு நிதி இல்லை என கூறுகின்றனர். இதன் காரணமாக நமது சொந்த மாநில நிதியில் இருந்து செலவழிக்கிறோம். மக்களுக்காக செய்யப்படும் நலத்திட்டத்திற்கு வாங்குகிற கடன் செலவினம் கிடையாது; அது சமூக முதலீட்டிற்கானது. கடன் வாங்கினாலும் மக்களுக்காக செலவிடுகிறோம். முதல்-அமைச்சர் கூட கடன் விகிதம் குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். தேவைப்பட்டால் அதைப் பாருங்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.16 லட்சம் கோடி மூலதனமாக கொண்டு வருவோம் என்றனர். ஆனால், அதில் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து இருநூற்றி பதினொரு கோடியை தான் கொண்டு வந்தனர். தற்போது இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் 2,25,815 கோடியை கொண்டு வந்து இருக்கிறார். இது நமது முதல்வரின் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* இதய சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 9.39 மணியளவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்தனர். தொடர்ந்து அண்மையில் மறைந்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post மக்கள் நலத்திட்டத்திற்காக வாங்கப்படும் கடன் செலவினம் கிடையாது; சமூக முதலீட்டிற்கானது: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: