தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து முதல் இரு அலகுகளில் உற்பத்தி துவங்க 3 மாதமாகும்: சேத மதிப்பை கண்டறிய குழு அமைப்பு; மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட முதல் 2 அலகுகளை தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் அல்பி ஜான் வர்கீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் குழு அமைத்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் மற்றும் உற்பத்தியை விரைவில் துவங்குவதற்கும் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அந்தப் பகுதி முழுவதும் கடும் வெப்பமாக காணப்படுவதால் உடனடியாக கணக்கெடுப்பில் ஈடுபட முடியவில்லை.

அதற்காக பொறியாளர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்து பிறகே சேத விவரம் தெரியும் வரும். ஆய்வில் 1, 2, 3 ஆகிய அலகுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 3வது அலகில் பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே இதனை இரு வாரங்களில் சரி செய்து மின் உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், 1, 2 அலகுகளில் கேபிள் வயர்கள் மற்றும் பிரேக்கர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அவை மாற்றம் செய்யப்பட்டு புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீ விபத்தில் அனல்மின் நிலையத்தின் நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய பாய்லர் டர்பன் ஜெனரேட்டர் பகுதியில் பாதிப்பு இல்லை. பவர் கேபிள்கள் செல்லக்கூடிய பகுதியில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1, 2வது அலகுகளை முழுமையாக சரி செய்ய 2 முதல் 3 மாதங்கள் ஆகலாம். வாரியத்தின் மிக முக்கியமான சொத்துகளில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் ஒன்று. அதை மீண்டும் சரி செய்து இயக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கோடைகால மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கூறினார்.

The post தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து முதல் இரு அலகுகளில் உற்பத்தி துவங்க 3 மாதமாகும்: சேத மதிப்பை கண்டறிய குழு அமைப்பு; மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: