இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி : இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. பொதுநல மனுக்களுக்கான மையம் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தற்போதைய நடைமுறைப்படி, சிஏஜி எனப்படும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கு பிரதமர் பரிந்துரைக்கும் எந்த ஒரு அதிகாரியையும் குடியரசு தலைவர் நியமனம் செய்ய முடியும் என்ற நடைமுறை அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகளை மீறுவதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய நடுநிலையான தேர்வுக்குக் குழுவின் பரிந்துரையின்படி சிஏஜி நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிராவில் சிஏஜி அறிக்கைகள் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர் என்றும் எனவே சிபிஐ இயக்குனர் நியமிக்கப்படுவது போன்று சிஏஜியும் நியமிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் வழக்கறிஞர் வாதம் செய்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிஏஜி தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

The post இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: