திருமணத்துக்கு மறுத்த காதலியை கிணற்றில் தள்ளி கொன்ற காதலன்

கலசப்பாக்கம்: தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காதலியை சரமாரி தாக்கி, கிணற்றில் தள்ளி கொன்ற காதலன் போலீசில் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் ரோஷினி(21), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக, கலசபாக்கம் அருகே வின்னுவாம்பட்டில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் சக்திவேல்(29) என்பவரும் படித்து வருகிறார்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பயிற்சி மையத்தில் இருந்து ரோஷினியும், சக்திவேலும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். பாடகம்-மன்சூராபாத் சாலையில் சென்றபோது திடீரென அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை சரமாரி தாக்கியுள்ளார். மேலும் அருகே உள்ள கிணற்றில் தள்ளியதாக தெரிகிறது.
இதையடுத்து அவர் நள்ளிரவில் போளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அப்போது போலீசாரிடம் ‘நானும், ரோஷினி என்பவரும் காதலித்து வந்தோம்.

அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் கடந்த சில நாட்களாக வரன் பார்த்து வந்தனர். இதனால் நான், ரோஷினியிடம் உடனே திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறினேன். அதற்கு மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அவரை கன்னத்தில் அறைந்தேன். இதனால் ரோஷினி, அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த பகுதி மங்கலம் காவல்நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மங்கலம் போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்றபோது ரோஷினி கிணற்றில் சடலமாக கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் சென்று ரோஷினியின் சடலத்தை மீட்டனர். ரோஷினியின் தலையில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அவரை, சரமாரியாக தாக்கி கிணற்றில் தள்ளி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மையான நிலவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.

The post திருமணத்துக்கு மறுத்த காதலியை கிணற்றில் தள்ளி கொன்ற காதலன் appeared first on Dinakaran.

Related Stories: