தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கேபிள் கேலரி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1 -வது யூனிட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின் ஒயர்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது.
குளிருட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் கம்பிகள் எரிந்து சேதமாகியது. விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலைய அலகு 1,2,3-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி 12 நேரமாக நீடிக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்புக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அனல்மின் நிலைய பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நவீன சாதனங்கள் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனல்மின் நிலைய பகுதியில் பிடித்த தீயை அணைக்க இன்னும் பல மணி நேரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தங்க மாரியப்பன், வெயிலுந்தராஜ் மூச்சு திணறல், மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தீ விபத்து: 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.