“நம்பியைத் தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ’’
இந்தப் பாசுரத்தில் குறுங்குடி, நம்பி என்ற இரண்டு சொல்லும் அற்புதமான அர்த்தம் பொதிந்தவை. நித்ய விபூதியான பரமபதத்தில் எம்பெருமான் இருக்கின்றான். அவனுடைய கல்யாண குணங்களும் இருக்கின்றன. வாத்ஸல்யம், ஸௌசீல்யம், ஸௌலப்யம் முதலிய எண்ணில் பல்குணங்கள் இருந்தாலும், பரமபதத்தில் இந்தக் குணங்களை யாரிடம் காட்ட முடியும்? அங்கு அந்த குணங்கள் உபயோகப்படாமல் கிடந்து, இந்நிலத்தில், அதாவது நாம் வசிக்கின்ற பூமியில் அல்லவா பயன்படுகின்றன. இங்குதானே எல்லாருக்கும் பகவானுடைய அருள் வேண்டும்; கருணை வேண்டும். பரமபதத்தில் அவனுக்கு வெளிச்சம் இருந்தாலும்கூட அது உச்சி வெயிலிலே எரிகின்ற பகல் விளக்கு போல இருக்கும்.
பிரகாசம் இருந்தாலும் தெரியாது. ஆனால், கோயிலில் அர்ச்சாவதாரங்களில் அவன் இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பவனனாதலால், பரிபூர்ணன் என்னும் பொருளையுடைய நம்பி என்னுஞ் சொல் இங்கு பொருந்தும். நம்பி என்ற சொல் திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஒரு திவ்யதேசத்தில் பிரகாசமாக இருக்கின்றது. அந்த திவ்ய தேசத்தின் பெயர்தான் குறுங்குடி. அங்கே உள்ள நம்பியைத்தான் “தென் குறுங்குடி நின்ற திரு மூர்த்தியை, ஆதியஞ்சோதியை, எம்பிரானை, என் சொல்லி மறப் பனோ?” என்று பாடுகிறார். இத்தலம் பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று.
பெயர் ஏன்?
இத்தலத்தின் பெயர் குறுங்குடி என்று வந்ததற்கு இரண்டு காரணங்கள்
1. குறுகியவனான வாமனனது க்ஷேத்ரமாதலால் இத்தலத்திற்குக் குறுங்குடி யென்று பெயர்.
2. வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சம் தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.
ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் திரு அவதாரத்திற்குக் காரணமாயிருந்த இந்த திருத்தலத்திற்கு கடந்த 10.2.2025 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்தத் தலத்திற்கு நாம் இன்று செல்கின்றோம்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை யாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
தல புராணம்
ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியைக்கொண்டு போய் பாதாள உலகத்தில் ஒளித்து வைக்கிறான். தேவர்கள் திகைக்கிறார்கள். நான்முகன் கை பிசைகிறார். உயிர்கள் கலங்குகின்றன. அப்பொழுது விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து கடலுக்குள் மூழ்கி, இரண்யாட்சனைக் கண்டுபிடித்து, அவனோடு மிக உக்கிரமாகப் போர்புரிந்து, பூமியை மீட்கிறார். பூமிப் பிராட்டியை அணைத்துக் கொண்டு மேலே வருகின்ற பொழுது அவள் அழுகின்றாள்.
வராகப் பெருமான் காரணம் கேட்கின்ற பொழுது பூமித்தாய், “இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் துன்பப்படுகின்றன. பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கித் தவிக்கின்றன. அவர்கள் துன்பம் நீங்கி பகவானை அடைய வழி கூறுங்கள்” என கேட்கின்றாள். அப்போது வராக மூர்த்தி மிக எளிதான இந்த மூன்று செயல்களைச் செய்தால் தம்மை அடையலாம் என்று சொல்கிறார்.
1. வாசனையுள்ள மலர்களால் இறைவனை பூசிக்க வேண்டும்.
2. அவனுடைய திருநாமங்களை வாயாரப் பாட வேண்டும்.
3. அவனை நம்பி ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்த மூன்றும் செய்பவர்கள் அவனுக்குப் பிரியமானவர்கள்.
நம் பாடுவான்
திருக்குறுங்குடி திவ்ய தேசம் நினைவுக்கு வந்தாலே, நமக்கு உடனடியாக அங்கு நடைபெறுகின்ற கைசிக ஏகாதசி உற்சவமும், நம் பாடுவான் சரித்திரமும் நினைவுக்கு வந்து
விடும். இந்தச் சரித்திரமும் வராக புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் பாணர் குலத்தில் நம்பாடுவான் என்ற ஒரு எளிய பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் பேர் கூடச் சரியாகத் தெரியவில்லை. பெருமாள் நம்மை தினமும் பாடுகின்றவன் என்பதனால் பிரியத்தோடு நம்பாடுவான் என்று பெயர் சூட்டினார்.
இவர் ஒவ்வொரு ஏகாதசிக்கும் முழுமையாக உபவாசமிருந்து, இரவெல்லாம் திருக்குறுங்குடி கோயில் நம்பியை பாடி, காலையில் துவாதசி பாரணை செய்வார். இப்படி ஒரு கார்த்திகை வளர்பிறை ஏகாதசி அன்று இவர் கோயிலுக்குப் பாடச் சென்ற போது வழியில் பிரம்மராட்சசன் பிடித்துக் கொண்டது.
“எனக்கு பசிக்கிறது. உன்னைச் சாப்பிடப் போகிறேன்’’ என்று பயமுறுத்தியது. நம்பாடுவான், ஒரு உயிருக்குதான் உணவாவது குறித்து எந்தக் கவலையும் படவில்லை.
ஆனால் பெருமாள் கைங்கரியம் தடை வருமே என்று வருத்தப்பட்டார். தான் கோயிலுக்குச் சென்று பாடி முடித்துவிட்டு வந்தவுடன், உனக்கு உணவாகிறேன் என்று சத்தியம் செய்துவிட்டு, கோயிலுக்குச் சென்று விடுகிறார் நம்பாடுவான்.
இவர் செய்த சத்தியம் குறித்து அற்புத மாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சாஸ்திர நிர்ணய விஷயங்கள் வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. நம்பாடுவான் பாடிவிட்டு திரும்பி வருகின்ற பொழுது, பிரம்மராட்ஸசன் நம் பாடுவான் பெருமையைப் புரிந்து கொண்டு, “தனக்கு சாபவிமோசனம் செய்யும்படி’’ வேண்டுகிறான். நம்பாடுவான் பலவாறு மறுத்து, கடைசியில்தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து, பிரம்ம ராட்சசை சாபத்திலிருந்து விடுவிக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
வேதம் ஓதிய அந்தணர் தவறான செயலால் பிரம்மராட்சஸாக மாறினார். ஆனால் கானம் பாடிய பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான், தான் பாடிய ஒரே ஒரு
பண்ணின் பலனைத் தந்து சாபவிமோசனம் தந்தார்.
1. பகவான், ஒருவர் பிறந்த குலத்தைப் பார்ப்பதில்லை; பக்தியை மட்டுமே பார்க்கிறான்.
2. பகவான் தமிழ்ப்பண்களைக் கேட்பதில் பிரியமானவனாக இருக்கிறான். கைசிக ஏகாதசி அன்று இரவு கண் விழித்து பகவானைப் பாட வேண்டும். அது நமக்கான புண்ணியங்களைத் தருவது மட்டுமல்ல, பிறருடைய பாவங்களையும் எரிக்க வல்லது. இவ்வரலாற்றை வராக மூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக தல புராணம் கூறுகிறது. வராகமூர்த்தியின் மடியிலிருந்த பூமிப் பிராட்டி அவரால் உரைக்கப்பட்ட கைசிக மகத்துவத்தைக் கேட்டுத் தாமும் பூலோகம் சென்று இறைவனின் பெருமையைப் பரப்ப வேண்டுமென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதாரம் செய்தார். எனவே ஆண்டாள் அவதாரத்திற்கு வித்திட்ட விளை நிலம் இதுதான்.
எத்தனை நம்பிகள்?
தல வரலாற்றைத் தெரிந்து கொண்ட நாம் ஆலயத்திற்குள் நுழைவோம். மகேந்திரகிரியின் அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோயிலின் கோபுரம் மிக உயரமாக இருக்காது. ஆனால், அகலமாக சிற்ப வேலைப் பாடுகளுடன் இருக்கும். உள்ளே நுழைந்தால் பல மண்டபங்கள் காணலாம். அதில் ஒன்றுதான் கைசிக ஏகாதசி மண்டபம். ஸ்ரீரங்கத்தின் தெற்குக் கோபுரம் ஒரு காலத்தில் கட்டப்படாது இருந்தது போலவே திருக்குறுங்குடியின் கிழக்குக் கோபுரமும் அமைந்துள்ளது. கோயில் சுற்றளவு மிகப்பெரியது. கோயிலின் நுழைவு வாயில். சுவர்கள் எல்லாம் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோபுரத்தின் சிற்பங்கள் அபாரமாக இருக்கும். சிற்ப அழகு நம்மால் விளக்கிச் சொல்லமுடியாத அளவுக்கு பெருமை பெற்றது.
அடடா எத்தனைச் சிற்பங்கள்? எத்தனை அழகு? எத்தனை கலைநயம்? ஒரு சிற்பக் களஞ்சியம் என்று சொல்லலாம். இந்தக் கோபுரத்தை சித்ர கோபுரம் என்று சொல்லுகின்றார்கள். மிகப் பழமையான இந்தக் கோயில் 1,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் சொல்லப்படுகிறது. இனி உள்ளே வாருங்கள். மூலவரை தரிசிப்போம்.
எம்பெருமானுக்கு நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, வடுக நம்பி, வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு, கிழக்கு நோக்கி நின்ற கோலம். தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார்.
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்தான். அப்பொழுது அவனுக்கு வானத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது “மன்னா! அதோ கருடன் பறப்பதைப் பார்! அந்த இடத்துக்கு கீழே பூமியைத் தோண்டினால் பெருமாள் சிலைகள் கிடைக்கும்’’அப்படியே மன்னன் மண்ணைத் தோண்டிப் பார்க்க அற்புதமான பெருமாள் தாயார் மூர்த்திகள் கிடைத்தன அந்த மூர்த்தங்களை மன்னன் நாங்குநேரி வானமாமலை திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ததாக ஒரு வரலாறு உண்டு.
நம்மாழ்வார் அவதாரம்
நம்மாழ்வார் அவதாரத்திற்குக் காரணமானவர் இப்பெருமான். நம்மாழ்வரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது வருந்தினர். ஒருமுறை திருக் குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, “நாமே வந்து உங்கட்குப் பிள்ளையாகப் போகிறோம்’’ என்று இப்பெருமான்கூற, அவ்விதமே நம்மாழ்வாராக அவதரித்தார். நம்மாழ்வாராக அவதரித்தது இந்நம்பியே என்ற நம்பிக்கை வைணவ மரபில் உண்டு. சடகோபர் அந்தாதியில் கம்பன் இந்த விஷயத்தை ஒரு பாசுரத்தால் காட்டுகின்றார். பகவானின் 11-வது அவதாரம் தான் நம்மாழ்வார் அவதாரம் என்று கம்பன் அதிலே காட்டி இருக்கின்றார். அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.
திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்
பல திருத்தலங்களைப் பாடிய திருமங்கையாழ்வார், ஒருமுறை திருவரங்கத்தில் பெருமாளிடம் தனக்கு மோட்சம் வேண்டுமென வேண்டினார். அப்போது அரங்கன், “இங்கே உனக்கு மோட்சம் கிடையாது. நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ’’ என்றுகூற, அவ்விதமே தெற்கு வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்தார். இங்கும் எம்பெருமானுக்கு பல நற்பணிகள் புரிந்தார். இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட அவரும் இவருக்கு வீடுபேறு தந்தார்.
திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இந்த திவ்ய தேசம்தான். ஊருக்கு வெளியே பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ள திருவரசு எனப்படும் திருமங்கையாழ்வார் முக்தி பெற்ற இடம் உள்ளது. இறைவனிடம் வீடுபேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம் திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தரு ளியுள்ளார்.
அரையர் சேவை இங்கு விசேஷம். மறைந்து போன நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீட்டுக் கொடுத்த நாதமுனிகள், அதனை இயலாகவும் இசையாகவும் தொகுத்து நாடெங்கும் பரப்ப, தம்முடைய மருமக்களை நியமித்தார். அவர்கள் நாடெங்கும் இயலாகவும் இசையாகவும் ஆழ்வார்களின் அருளிச் செயலைப் பிரச்சாரம் செய்தனர்.அவ்வகையில் நாதமுனிகளின் வம்சத் தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் இந்த ஊரில் வசித்துவந்தார்கள். அவர்கள் வழிவழியாக தமது வீட்டின் பின்னால் உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்றுக் கொடுப்பார்களாம். இத்தலத்து பெருமாளே ஒரு வைணவன் வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.
ஐந்து நிலைகளில் பெருமாள்
நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடிச் சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாகப் புராணம் கூறுகிறது. இத்தலத்தில் சிவபெருமானுக்கும் சந்நதி இருந்தது. சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர். இப்போது சந்நதி இடிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. பைரவருக்கும் சந்நதி உள்ளது. திருமங்கையாழ்வார். “அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் என்று பாடியிருக்கிறார். திருக்குறுங்குடி ஜீயர் ‘‘பக்கம் நின்றார்க்கு குறையேதும் உண்டோ?” என்று கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
ராமானுஜரின் சீடரான பெருமாள்
வைணவ குருவான ராமானுஜர், வைணவத்தைப் பரப்பி எல்லோரையும் எம்பெருமானிடம் ஈடுபாடு செய்து வரலானார். அவருக்கு ஆயிரக் கணக்கில் சீடர்கள் இருந்தனர். அவர் திருக்குறுங்குடி வந்து பெருமாளை தரிசித்த போது பல அவதாரங்கள் எடுத்து தம்மால் செய்ய முடியாத காரியத்தை நீர் சுலபமாய் செய்தது எப்படி என்று திருக்குறுங்குடி எம்பெருமான் கேட்க, அதற்கு ராமானுஜர் “கேட்கும் விதத்தில் கேட்டால் பதில் தருவோம்’’ என்று சொல்ல, இத்தலத்தின் நம்பியும் சீடனாக அமர்ந்து இவரை குருவாக ஏற்று விளக்கம் கேட்டாராம்.
அதனால் இத்தலத்துப் பெருமானை வைஷ்ணவ நம்பி என்று அழைப்பதுண்டு.அதுமட்டுமின்றி ஒருமுறை திருவனந்தபுரத்திலிருந்து இங்கு வந்த எம்பெருமானார், காலையில் நீராடிவிட்டு தம்முடைய சீடராகிய வடுக நம்பி அழைக்க, அப்பொழுது அவர் அங்கு இல்லாது போக, பகவானே இவருக்காக திருமண் பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்தானாம். இங்கிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் திருப்பாற்கடல்என்ற ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சந்நதியும் உள்ளது. இதே போன்று இங்கிருந்து 6 கிமீ தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில், மலைமேல் நம்பி சந்நதியும் உள்ளது. அற்புதமான மலைகளும் காடுகளும் சூழ்ந்த இந்தத் திருத்தலத்தை, ஒருமுறை தரிசிக்க வாருங்கள். நம்பி வாருங்கள். திருக்குறுங்குடி நம்பி அருள் தருவான்.
எப்படி செல்வது?
நாகர்கோவில் – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும், வள்ளியூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மலைமேல் உள்ள நம்பியை சேவிக்க வாகன வசதி உண்டு.
*திருவிழாக்கள்: சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப
உற்சவம், பங்குனி பிரம்மோற்சவம்.
*தீர்த்தம்: நம்பியாற்றங்கரையில் உள்ள திருப்பாற்கடல், பஞ்சதுறை.
*இச்சந்நதி திருக்குறுக்குடி ஜீயர் நிர்வாகத்தில் உள்ளது. ராமானுஜரால்தான் இந்த ஜீயர் மடம் உருவாக்கப்பட்டது.
*ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருமலை நம்பிக்கு சிறப்பு பூஜைகள், வெகு விமரிசையாக நடைபெறும்.
*விலகிய கொடிமரம்: நம் பாடுவான் என்கிற பக்தனுக்காக கொடி மரத்தை தள்ளச் செய்து பகவான் காட்சி தந்தாராம். அதனால் இத்தலத்தில் மட்டும் கொடிமரம் விலகி இருக்கும்.
*கோயில் திறக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை.
தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்
The post தென் குறுங்குடி நம்பியை என் சொல்லி மறப்பனோ? appeared first on Dinakaran.