கடலூர், மார்ச் 12: பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி நகை கடை உரிமையாளரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் புக்ராஜ் மகன் வினை ஜெயின்(38). இவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலையில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி ஒரு நபர் ரூ.33 லட்சத்து 56 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து வினை ஜெயின் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மௌலீஸ்வரன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த முகமது சாஜித்(30) என்பவருடைய தனியார் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 854 பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.
அதன் பிறகு போலீசார் கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதிக்கு சென்று அங்கு தலைமறைவாக இருந்த முகமது சாஜித்தை நேற்று கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், முகமது சாஜித் தனது ஆதாரங்களின் மூலம் 3 வெவ்வேறு வங்கி கணக்குகளை தொடங்கி, அந்த வங்கி கணக்குகளை பணத்திற்காக விற்று லாபம் சம்பாதித்ததும், அவரின் வங்கி கணக்குகள் பல மாநில குற்ற வழக்குகளில் தொடர்புடையது என்றும் தெரியவந்தது.
மக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் சிக்காமல் இருக்க அவரவர் வங்கி கணக்கு விபரங்களையோ மற்றும் செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆதாரங்களையோ, சுய விபரங்களையோ முகம் தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
The post நகை கடை உரிமையாளரிடம் ரூ.33.56 லட்சம் மோசடி appeared first on Dinakaran.