தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்

 

கடலூர், மார்ச் 12: கடலூரில் மாணவர் ஒருவர் தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் வண்ணாரபாளையம் புதுத் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(45), ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் இளஞ்செழியன் கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு வணிகவியல் படித்து வந்தார். தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு நாராயணன் உயிரிழந்தார். இதனால் மாணவர் இளஞ்செழியன் கதறி அழுதார். இந்நிலையில் இளஞ்செழியன் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படியாவது எழுத வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். இதை கேட்ட இளஞ்செழியன் தந்தையின் உடலை வணங்கி விட்டு, சோகத்துடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று வணிகவியல் தேர்வை நேற்று எழுதினார்.

இதன் பிறகு இளஞ்செழியனின் வகுப்பில் படிக்கும் சக நண்பர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வு முடிந்தவுடன் இளஞ்செழியனின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தந்தை இறந்த நிலையிலும் மாணவர் பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர் appeared first on Dinakaran.

Related Stories: