திருக்கோவிலூர், மார்ச் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கோமாளூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த வருடம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று புகார் அளித்ததன் பேரில் மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் நரசிம்ம ஜோதி, சத்தியசீலன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு போலியாக ஆவணங்களை வைத்து தங்கள் நிலங்களை பத்திரப்பதிவு செய்ததாக ஏழுமலை, சரவணகுமார் உள்ளிட்ட 8 பேர் திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை தாலுகா காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்த பலகோடி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர் மலர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த பத்திரப்பதிவில் ஆவணங்களை தயார் செய்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்யும் சீனிவாசன் என்பவர் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (55) என்பதும், இவர் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் பத்திரப்பதிவு செய்யும் இடங்களில் ஆவண எழுத்தர்களுக்கு உதவியாக இருந்து வந்தது தெரியவந்தது.
மேலும் திருக்கோவிலூர் அடுத்த செங்கணாங்கொல்லை, கோமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களை காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்த பலகோடி ராஜேந்திரன், மலர் ஆகியோருடன் சேர்ந்து மூளையாக செயல்பட்டு போலி ஆவணங்களை தயாரித்து திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 10 பத்திரங்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பலகோடி ராஜேந்திரன், மலர் ஆகியோர் கைது செய்யப்பட்டதால் கடந்த சில மாதங்களாக சீனிவாசன் தலைமறைவாக இருந்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் திருக்கோவிலூர் போலீசார் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த மற்ற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய மூளையாக செயல்பட்டவர் கைது appeared first on Dinakaran.