நெய்வேலி, மார்ச் 15: நெய்வேலியில் கொத்தனார் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மனைவி, மருமகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அடுத்த பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (55), கொத்தனார். இவரது மனைவி தமிழரசி (50). இவர்களது மகன் ராஜாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு குடிபோதையில் வருவாராம். அப்போது மருமகள் மணிமேகலையிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தந்தை, மகன் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாம்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு இரவு போதையில் வீட்டிற்கு வந்த சரவணன், அங்கிருந்த மருமகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை தடுத்த தமிழரசி, கணவரிடம் சண்டை போட்ட நிலையில், சரவணனை பயமுறுத்த வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து கணவர் மீது ஊற்றியுள்ளார். மேலும் தீக்குச்சியை கொளுத்தி மேலே போடுவதாக பயமுறுத்தியபோது எதிர்பாராதவிதமாக தீக்குச்சி சரவணன் மீது பட்டு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
உடனே தமிழரசி உறவினர்களுடன் சேர்ந்து சரவணன் மீது போர்வையை போட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை குறித்து மந்தாரகுப்பம் போலீசார் சரவணனின் மனைவி தமிழரசி, மருமகள் மணிமேகலை ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட சரவணனின் உடல் சென்னையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு நெய்வேலி கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
The post நெய்வேலியில் கொத்தனார் உயிரோடு எரித்துக் கொலை மனைவி, மருமகளிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.