போலி உயில் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி

 

புதுச்சேரி, மார்ச் 10: ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை போலி உயில் தயாரித்து மோசடி செய்த வழக்கில், வீட்டு வேலைக்கார பெண்ணை புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கலவை சுப்பராய செட்டியார் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மூலகுளத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. ரங்கநாதனுக்கு வாரிசு இல்லை. இவரது வீட்டில் வேலை செய்ததாக கூறி, திண்டிவனம் முளைச்சூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (50) என்பவர், ரங்கநாதன் தனது நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான 50 ஆயிரம் சதுரடி இடத்தை உயில் எழுதி கொடுத்ததாக, போலி உயில் தயாரித்துள்ளார்.

புதுச்சேரி சாரம் அய்யப்பன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் முத்துக்குமரன் (50), போலி உயில் மூலம் அந்த நிலத்திற்கு பவர் எழுதி பெற்றார். பின் லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த பலராமன் என்பவரிடம் 50 ஆயிரம் சதுரடி நிலத்திற்கு ரூ.4.5 கோடி புரோக்கர் முத்துக்குமரன் விலை பேசினார். நிலத்திற்கு ரூ.30 லட்சம் முன்பணம் முத்துக்குமரனுக்கு அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடம் இறந்துபோன ரங்கநாதன் பெயரில் இருப்பதும், முத்துக்குமரன் சமர்ப்பித்த முனியம்மாள் பெயரிலான உயிலில் ரங்கநாதன் கையெழுத்தும் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உண்மையான உயிலில் இருக்கும் கையெழுத்துக்கும் வித்தியாசம் இருந்தது.

இதனால் பத்திரப்பதிவு செய்ய உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகம் மறுத்தது. போலி உயில் கொடுத்து ஏமாற்றியதாக பலராமன், சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் மோசடி வழக்கு பதிந்து முனியம்மாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரியல் எஸ்டேட் புரோக்கர் முத்துக்குமரனை தேடி வருகின்றனர்.

The post போலி உயில் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: