திங்கள்சந்தை : திங்கள்சந்தை அருகே கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திங்கள்சந்தை அருகே தலக்குளம் புதுவிளையில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் காலை, மாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இரவு பூஜைகள் முடிந்து கோயில் நடையை சாத்திவிட்டு பூசாரி செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பூசாரி கோயில் கதவை திறக்க வந்தார். அப்போது பூட்டு உடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கோயிலில் இருந்த காணிக்கை பெட்டி உடைந்து கிடந்தது. அதில் இருந்த பணம் மாயமாகி இருந்தது.
இதையடுத்து கோயிலில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் அதிகாலை சுமார் 2.20 மணி அளவில் லுங்கி, சட்டை அணிந்து உண்டியலை உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் கையில் கட்டை பையுடன் வெளியேறி செல்வதும் தெரியவந்தது. இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. இதுகுறித்து கோயில் நிர்வாக தலைவர் ஐயப்பன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் உண்டியல் பணம் ₹ 10 ஆயிரம் வரை திருட்டுப் போய் இருக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே காவடிக்கட்டு திருவிழாவின் போது மக்கள் நெருக்கம் மிகுந்த திங்கள்நகர் பணிமனை முன்பு நிறுத்தப்பட்டு இருந்து ஸ்கூட்டர் திருட்டு போயிருந்தது.
அதேபோன்று கடந்த 25ம் தேதி சுங்கான்கடையில் தனியார் கல்லூரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் காணாமல் போயிருந்தது. சமீப காலமாக இரணியல் பகுதியில் நடந்து வரும் இந்த திருட்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மண்டைக்காடு கொடைவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் திங்கள்சந்தை பகுதியில் குவிவார்கள். இதனால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
The post திங்கள்சந்தை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.
