தற்போது, நூற்றாண்டை கடந்துள்ளதால் இப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1910-2025 வரை 4 தலைமுறை மாணவர்களை உருவாக்கிய இப்பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் குழு மூலம் ஒருங்கிணைந்தனர். தொடர்ந்து, நேற்று தாங்கள் படித்த பள்ளிக்கு தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். ஒருவருக்கொருவர் கட்டி பிடித்து நலம் விசாரித்து நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், கண்ணீர் மல்க தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும், ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீ பெற்று மகிழ்ந்தனர். பிறகு, குழுக் குழுவாகவும், குடும்பம் குடும்பமாகவும் ஆசிரியர்களுடன் மாணவ-மாணவிகள் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து, ஆடல், பாடலுடன் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளால் பள்ளி வளாகம் களைகட்டியது.
இதையடுத்து, பள்ளிக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, நாற்காலி, டேபிள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர். முன்னதாக, பள்ளிக்கு வருகை தந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் சல்யூட் அடித்தும், பூக்கள் தூவியும் வரவேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நூற்றாண்டு விழாவில் ஊராட்சி தலைவர் சுகுணா சுதாகர், துணை தலைவர் வேணுகோபால், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post குழிப்பாந்தண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.
