சென்னை: தமிழ்நாட்டின் வரியில் தின்று கொழுத்துவிட்டு அதற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கை வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்வது அந்தந்த மாநிலங்களின் உரிமையே தவிர, டெல்லியில் அமர்ந்து கொண்டு ஒன்றிய அரசோ அதன் எஜமானர்களோ முடிவு செய்யக்கூடாது. தமிழ்நாட்டில் படிக்கின்ற மாணவர்களுக்கு என்ன படிக்க வேண்டும். என்ன மொழி கற்க வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற ஆபத்து தமிழ்நாட்டிற்கு வந்து விடக்கூடாது என்ற பேரச்சத்தில், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதனை புரிந்துக் கொள்ளாமல், யாரோ ஒரு சூப்பர் முதல்வர் என்றும் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்றும் தர்மேந்திர பிரதான் கூறுவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடிகளை கொள்ளையடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு 20 ஆயிரம் கோடிகளை கூட வழங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டின் வரியில் தின்று கொழுத்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
The post தமிழ்நாட்டின் வரியில் தின்று கொழுத்துவிட்டு தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்: வேல்முருகன் அறிக்கை appeared first on Dinakaran.