இந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக 2024ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சாகித்ய அகாடமி விருது, பேராசிரியர் விமலாவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நேற்று கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் பேராசிரியை விமலாவிற்கு கல்லூரி ரெக்டர் இன்னாசிமுத்து, செயலாளர் புஷ்பராஜ், முதல்வர் காட்வின் ரூபஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். விருது அறிவிக்கப்பட்டது குறித்து பேராசிரியை விமலா கூறியதாவது:
எனது சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். என்னையும், எனது சகோதரி மற்றும் சகோதரரை எனது தாய் வறுமைக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார். ஒரு நாளை ஓட்டுவதே சிரமமாக இருந்தது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கஞ்சி வைத்து கொடுப்பார். வெந்நீர் குடத்தை இடுப்பில் சுமந்து எடுத்து சென்று ஊற்றி கொடுத்து கூலி பெற்றார். இதனால் அவரது இடுப்பு வெந்து புண்ணாகிப்போனது. அதை மறக்க முடியாது.
என்றாவது ஒருநாள் இந்த சமூகம் முன் உயர்வாக நிறுத்த வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. எனது 10, 12ம் வகுப்பிற்கு பிறகு கல்லூரியில் சேர்ந்து பயில வசதி இல்லாததால் முந்திரி உடைப்பு தொழில் செய்து கொண்டு அஞ்சல் வழி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஏ, எம்ஏ படித்தேன். அந்த சான்றிதழுடன் பிஎச்டி கற்க முயன்ற போது அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொலைதூரக் கல்வியை பொருட்படுத்தவில்லை. எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தொடர்ந்து முயன்றதில் டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் வாய்ப்பு தந்தது. அங்கு 6 வருடம் ஒருங்கிணைந்த படிப்பாக பிஎச்டி, எம்பில் முடித்தேன். பேராசிரியர் நாச்சிமுத்து எனக்கு உதவினார். எம்பில் கைடு பேராசிரியர் சந்திரசேகர் உதவினார். அவர் மலையாள மொழி நன்கு தெரிந்தவர். அவர் கற்றுத்தந்தார். முனைவர் பட்டம் பெற பேராசிரியர் அரவிந்த் உதவினார். அவரிடம் காலம், நேரம் முக்கியம் என்பதை கற்றுக்கொண்டேன். தொடர்ந்து சிவகாசி, திருச்செங்கோடு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது கடந்த 2 ஆண்டுகளாக பாளை. சேவியர்ஸ் கல்லூரியில் பணிபுரிகிறேன். மலையாளம் நன்கு தெரியும் என்பதால் நளினி ஜமீலா எழுதிய என்றே ஆணுங்கள் என்ற நூலை தமிழாக்கம் செய்து வெளியிட்டேன். இந்த நூலில் பாலியல் தொழிலாளியை சமூகம் எப்படி பார்க்கிறது என்ற கோணத்தில் எழுதியிருந்தார்.
மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. என்னை வளர்த்த எனது தாய்க்குத் தான் இந்த பெருமை எல்லாம் சேரும். அவர் என்னை வளர்த்து ஆளாக்க மேற்கொண்ட கடின உழைப்பு முயற்சிகளுக்கு இன்று பலன் கிடைத்திருப்பதாக கருதுகிறேன். எனக்கு இந்த விருது கிடைக்க என்னை செம்மைப்படுத்திய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘எனது ஆண்கள்’ தமிழ் மொழி பெயர்ப்பு நூலுக்கு அறிவிப்பு நெல்லை பேராசிரியைக்கு சாகித்ய அகாடமி விருது: இந்த பெருமை எனது தாயையே சேரும் என ஆனந்த கண்ணீர் appeared first on Dinakaran.
