கரூர், மார்ச். 8 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து கலெக்டர் தங்கவேல்தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய திட்டங்கள் தரமானதாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவதை, அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து குடிநீர் தேவையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிககைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய் பழுதடைந்தால் அதனை உடனடியாக சரி செய்து, சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். மேலும், சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், தேசிய வேலை உறுதி திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம், கலைஞர் கனவு இல்லம், பண்டிதர் குடியிருப்பு, மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 48.66 கோடி மதிப்பில் 751 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 65 3 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 98 பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பாப்பக்காபட்டி, வயலூர், வீரியபாளையம் ஊராட்சிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குப்பாச்சிபட்டியில் ரூ. 72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் கூடத்தையும், பாப்பாக்காபட்டி ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பில் கணினி அறை கட்டும் பணி மற்றும் ரூ. 35லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாப்பாகப்பட்டி ஊராட்சியில் ரூ 3.50 லட்சம் மதிப்பில் சிறிய அளவிலான சமூதாய சுகாதாரவளாகம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இநத நிகழ்வின் போது, உதவி செயற்பொறியாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், முருகேசன், பொறியாளர்கள் ஜெகதீசன், சரவணன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.
