திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை

*கணவனுக்கு வலைவீச்சு

தஞ்சாவூர் : அய்யம்பேட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் தமிழரசன்.

இவரது மனைவி ரேவதி. இவர்களுடைய மகள் புவனேஸ்வரி (20). இவரும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கீழவன்னிப்பட்டு அம்பலகார தெருவை சேர்ந்த சபரி (23) என்பவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு புவனேஸ்வரியும் அவரது கணவர் சபரியும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் தமிழரசன், ரேவதி வேலை பார்க்கும் செங்கல் சூளைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வந்து அங்கேயே தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புவனேஸ்வரி, சபரி தங்கியிருந்த குடிசை வீட்டுக்குள்ளிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது புவனேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது கணவர் சபரி அவசர அவசரமாக அங்கிருந்த தப்பியோடியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக புவனேஸ்வரியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரனை நடத்தினர்.

மேலும் தப்பியோடிய சபரியை பிடிப்பதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர் சிலம்பரசன், தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை appeared first on Dinakaran.

Related Stories: