மறைமலைநகர் அருகே பலே திருடன் கைது: 16 சவரன் நகை பறிமுதல்; தப்பி ஓடும்போது கால் முறிவு


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் பொத்தேரி ஜிஎஸ்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை துரத்தி பிடிக்க முயற்சித்தபோது வேகமாக ஓடிய அந்த நபர் மறைமலைநகர் அருகே உள்ள தண்டவாளத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. உடனே அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை எம்.கே.பி.,நகரை சேர்ந்த இம்ரான்கான் (39) என தெரிய வந்தது.

இவர் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் இரண்டு மாதங்களுக்கு முன்பு சிங்க பெருமாள் கோவில் அடுத்த விஞ்சியம்பாக்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து மொபைல்போன், மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இம்ரான்கானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதோடு அவரது உடமைகளை சோதனையிட்டதில் அவரிடமிருந்து 16 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டு தப்பியோடிய இம்ரான்கானின் வலது காலில் முறிவு ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இம்ரான்கானுக்கு அளித்த சிகிச்சைக்கு பின் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மறைமலைநகர் அருகே பலே திருடன் கைது: 16 சவரன் நகை பறிமுதல்; தப்பி ஓடும்போது கால் முறிவு appeared first on Dinakaran.

Related Stories: