வேலூர், மார்ச் 6: குடியாத்தம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹4 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பியிடம் வாலிபர் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி மதிவாணன் தலைமை தாங்கினார். ஏடிஎஸ்பிகள் பாஸ்கரன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். அவர்களிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அதில், குடியாத்தம் தாலுகா பூசாரிவலசையை சேர்ந்த வாலிபர் ஒருவர் அளித்துள்ள மனுவில், நான் டிப்ளமோ படித்துள்ளேன். எனக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக லத்தேரி அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் 2023ம் ஆண்டு ரூ.4 லட்சம் வாங்கினார். 2 வருட ஒப்பந்தத்தின்படி அனுப்புவதாக கூறி முதல் 3 மாதம் டிரெயினிங் எம்ப்ளாய்மெண்ட் விசாவில் என்னை அனுப்பி வைத்து ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அரியூர் வசந்தம் நகரை சேர்ந்த ஒருவர் அளித்துள்ள மனுவில், கடந்த 2011ம்ஆண்டு எனக்கு பழக்கமான ஒரு குடும்பத்தினர் தங்கள் குடும்ப சூழ்நிலையை கூறி என்னிடம் ₹5 லட்சம் கேட்டனர். அதற்கு அசலுடன் வட்டியும் திருப்பித் தருகிறோம் என கூறினர். பணத்தை கட்ட தவறினால் வீட்டின் சாவியை ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதனை நம்பி நானும் அவர்களுக்கு ரூ.5லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தையோ, வட்டியையோ திருப்பி தரவில்லை. அவர்கள் கொடுக்கின்ற காசோலையை வங்கியில் செலுத்தினால் பணம் இல்லை என திரும்ப வந்தது. இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தேன். போலீசார் விசாரணை செய்து அவர்களிடமிருந்து ₹1 லட்சம் பெற்று தந்தனர். மீதி தொகையை 3 மாதத்திற்குள் திருப்பி தருவதாக கூறினர். ஆனால் இதுவரை தரவில்லை. வீட்டையும் அவர்கள் விற்பனை செய்துவிட்டது தெரிய வந்தது. எனவே தலைமறைவான அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
பள்ளிகொண்டா அடுத்த கட்டுபடியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த மனுவில், எங்கள் ஊரில் எனது கணவர் பெயரை கொண்டவர்கள் 3 பேர் இருக்கின்றனர். எனது கணவர் நாட்டுக்கோழி வியாபாரம் செய்து வருகிறார். நான் முனீஸ்வரன் கோயில் கட்டி அதில் அருள்வாக்கு சொல்லி வருகிறேன். நேற்று முன்தினம் பள்ளிகொண்டா போலீசார் மற்றும் வேலூர் கலால் பிரிவு போலீசார் எனது கணவர் பெயரைக்கூறி ஆள் மாறி எங்கள் வீட்டிற்கு வந்தனர். மேலும் பாட்டில் ஓட்டுகிறீர்களா எனக்கேட்ட வீட்டை சோதனை செய்தனர். வீட்டில் எதுவும் இல்லாததால் வேறொரு நபரின் பெயருக்கு பதில் உங்களது வீட்டிற்கு வந்து விட்டோம் எனக்கூறி போலீசார் திரும்பி சென்றனர். இனிவரும் காலங்களில் பொய் தகவலின் பேரில் ஆள் தெரியாமல் எங்கள் வீட்டை சோதனை செய்து சோதிக்க வேண்டாம். இதனால் நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹4 லட்சம் மோசடி குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பிடம் வாலிபர் புகார் குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.