கருவுற்ற தாய்மார்கள் 1,000 நாட்களுக்கு சத்தான உணவு உட்கொண்டால், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு

வேலூர், மார்ச் 13: கருவுற்ற தாய்மார்கள் 1,000 நாட்களுக்கு சத்தான உணவு உட்கொண்டால், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும் என சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார். வேலூர் அடுத்த புதுவசூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் வேலூர் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் அமுதா, ஆர்டிஓ விஷ்ணுப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சமுதாய வளைகாப்பு நடத்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் தலா 100 கர்ப்பிணிகளை கொண்டு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. எதிர்கால தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு ஒரு தாய்க்கு தான் உள்ளது. ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் 1000 நாட்கள் வரை ஆரோக்கியமான உணவு உட்கொண்டால், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும்.

அப்போது தான் அந்த குழந்தை எதிர்காலத்தில் ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும். மகப்பேறு காலத்தில் சில இடர்பாடுகள் ஏற்படலாம். இந்நேரத்தில் கவனமாக இருந்து சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ பரிசோதனைகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் பேசுகையில், ‘அணைக்கட்டு தொகுதியில் நாளை(இன்று) 1,072 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு வாழ்த்த உள்ளார். அனைத்து கர்ப்பிணிகளும் அரசின் உதவிகளை பெற்று சிறப்பான முறையில் குழந்தை பெற்றெடுத்து வளர்க்க வேண்டும்’ என்றார். ஒன்றிய குழு துணைத்தலைவர் மகேஸ்வரி காசி, வெங்கடாபுரம் தலைவர் பாபு, பிடிஓ வின்சென்ட் ரமேஷ்பாபு, தாசில்தார் முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கருவுற்ற தாய்மார்கள் 1,000 நாட்களுக்கு சத்தான உணவு உட்கொண்டால், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: