கொக்கு வேட்டையாடிய 2 நரிக்குறவர்களுக்கு ₹20 ஆயிரம் அபராதம் ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், மார்ச் 5: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட அகரம்சேரி பகுதியில் கொக்கு உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடுவதாக ஒடுகத்தூர் வனச்சரகர் வெங்கடாச்சலத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனவர்கள் தயாளன், துளசிராமன், பழனி, சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அப்பகுதியில் நரிக்குறவர்கள் 2 பேர் நீர் நிலைகளில் இருந்த கொக்கு உள்ளிட்ட பறவைகளை அனுமதியின்றி வேட்டையாடிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. அப்போது அங்கு சென்ற வனவர்களை பார்த்ததும் தப்பியோட முயற்சித்த போது அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின் வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் அகரம்சேரி அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் சத்தியராஜ் (32), சந்தோஷ்(19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது அனுமதியின்றி பறவைகள் வேட்டையாடிய குற்றத்திற்கு 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து வன அலுவலர் குருசுவாமி தபேலா உத்தரவின் பேரில் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
பின்னர், பறவைகளை வேட்டையாடுவது சட்டபடி குற்றமாகும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த இறந்த 2 கொக்குகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதனை தீயிட்டி எரித்தனர்.

The post கொக்கு வேட்டையாடிய 2 நரிக்குறவர்களுக்கு ₹20 ஆயிரம் அபராதம் ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.

Related Stories: